Koothanur Saraswathi
Koothanur Saraswathi

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி ஆலயம்

5/5 - (1 vote)

சரஸ்வதி தேவிக்குப் பிரசித்திப் பெற்ற கோயிலாக விளங்குவது கூத்தனூர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் பூந்தோட்டம். இந்த ஊரில் கலைகளுக்கு அதிபதியாய் விளங்குகின்ற சரஸ்வதி அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. புராண காலத்தில் அம்பாள்புரி என்றும், பூந்தோட்டம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், பிற்காலத்தில் இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன் அவைப் புலவர் ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதால் கூத்தனூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது.

இங்கே சரஸ்வதி தேவி கன்னி சரஸ்வதியாக வீற்றிருந்து, தன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்குக் கல்விச் செல்வத்தை அள்ளி வழங்கி அருள்புரிகிறாள். சரஸ்வதி தேவி இங்கே கன்னி சரஸ்வதியாக கோயில் கொண்டதன் பின்னணியில் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

பிரம்மதேவரும், சரஸ்வதி தேவியும் சத்தியலோகத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி தேவிக்கு, ‘எல்லோருக்கும் கல்வியும் ஞானமும் வழங்கும் தானே உயர்ந்தவள்’ என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. சரஸ்வதியின் எண்ணம் தெரிந்த பிரம்மதேவர் படைப்புத் தொழில் செய்வதால் தானே பெரியவன் என்று வாதிட்டார். முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். அதன்படி அவர்கள் இருவரும் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி – சோபனை ஆகியோருக்கு முறையே பகுகாந்தன், சிரத்தை என்ற குழந்தைகளாகப் பிறந்தனர்.

இருவரும் திருமண வயதை அடைந்தனர். பெற்றோர் இவர்களுக்கு ஏற்ற வரனைத் தேடினர். அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்ற விவரம் தெரிய வந்தது. ஆனால், ஒரு தாயின் குழந்தைகளாகப் பிறந்து, சகோதர முறையில் இருப்பதால், திருமணம் செய்துகொண்டு ஊராரின் கேலிக்கு ஆளாக விரும்பவில்லை. எனவே, இருவரும் சிவபெருமானைப் பணிந்து வணங்கி, தங்களின் இக்கட்டான நிலையைக் கூறினர்.

இந்த தர்மசங்கடத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்று ஆலோசனையும் கேட்டனர். ஆனால், ”சகோதர முறையில் உள்ள நீங்கள் திருமணம் செய்துகொள்வது முறையில்லை. சரஸ்வதி மட்டும் இங்கே கன்னியாக இருந்து, வழிபடும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வழங்கட்டும் என்று கூறி மறைந்தார். அதன்படி சரஸ்வதி தேவி இங்கே கன்னி சரஸ்வதியாக கோயில் கொண்டுள்ளாள்.

தமிழகத்தில் சரஸ்வதிக்கான தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. கருவறையில், சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடை உடுத்தியவளாக, வெண் தாமரை மலரில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். வல மேல்கரத்தில் அட்சமாலை ஏந்தி, வல கீழ்க்கரத்தில் சின்முத்திரை காட்டி, இடது மேல்கரத்தில் அமிர்த கலசம் ஏந்தி, இடது கீழ்க்கரத்தில் புத்தகமும் கொண்டு எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

புருஷோத்தம பாரதி என்பவருக்கு விஜயதசமியன்று அம்பிகையின் அருள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக விஜயதசமி நாளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து வித்தியாப்பியாசம் செய்த பிறகே பள்ளியில் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட்ட தலம் இது. அவர் கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் அமைத்து, காவிரி நீரால் சரஸ்வதி தேவிக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார். அவருடைய பூஜையில் மனம் மகிழ்ந்த சரஸ்வதி தேவி, ஒட்டக்கூத்தருக்குத் தன் வாய் தாம்பூலத்தை வழங்கியதாகவும், அதன் பலனாக ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் திறம் பெற்று, மூன்று சோழ மன்னர்களின் அரசவைப் புலவராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சரஸ்வதி கோயிலில் வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சாரதா நவராத்திரி விழா 12 நாள்களும், பின்னர் பத்து நாள்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன. விழா நாள்களில் சரஸ்வதி தேவி சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் என்று பல்வேறு அலங்காரங்களில் காட்சி தருவதை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். சரஸ்வதி பூஜையன்று மட்டும் நியமத்துடன் விரதமிருந்து, பக்தர்களே அம்பிகையின் திருவடிகளில் மலர் கொண்டு அர்ச்சிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

விஜயதசமி நாளில் நூற்றுக்கணக்கான கார், வேன் முதலான வாகனங்களுக்கு பூஜை செய்த பிறகு கோயிலை வலம் வருவது பிரமிக்க வைக்கும் காட்சியாகும்.

நவராத்திரி நாள்களைத் தவிர, ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. பௌர்ணமிதோறும் மாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சரஸ்வதி தேவியின் அவதார நட்சத்திரமான மூலம் நட்சத்திரம் வரும் நாளிலும் விசேஷமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. விசேஷ நாள்களிலும், சரஸ்வதிக்கு உரிய புதன்கிழமைகளிலும் அம்பிகைக்குத் தேனும் பாலும் அபிஷேகம் செய்தால் கல்வியில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெறலாம் என்பது ஐதீகம்.

நமக்கெல்லாம் அருள் புரியவேண்டும் என்பதற்காகவே கன்னியாகுமரியில் அன்னை உமையவள் கன்னியாக இருப்பதைப் போலவே, நமக்கு உயர்கல்வி, நல் ஞானம் ஆகியவற்றை அருள்புரிய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு கூத்தனூரில் கோயில் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியைத் தரிசித்து வழிபட்டு அருள் பெறுவோம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *