அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அவரை காண அங்கு ரசிகர்கள் சூழ்ந்ததால் ஆடி காரில் வந்திருந்த அவர் கூட்ட நெரிசலால் அங்கிருந்த ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.
சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி என்னும் தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி பாக்தாதி 450 ஆண்டுகளுக்கு முன்பு பாக்தாத் ஷரீப்பில் இருந்து வந்து , தற்போது மவுண்ட் ரோடு தர்கா என்று அழைக்கப்படும் இடத்தில் வாழ்ந்தார்.
ஹஸ்ரத் சையத் மூசா ஷா காத்ரி பாக்தாதி நோய்களை சிறந்த குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் இறந்தவுடன், அவர் அவரது வீட்டிற்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார், இங்கே அவரது குடும்பத்தினர் தர்கா ஷரீஃப் எழுப்பினர். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, தனது காரில் செல்லாமல் அங்கிருந்த ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.