Thiruvarur Heat Wave
Thiruvarur Heat Wave

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

5/5 - (4 votes)

மார்ச் மாத இறுதியில் இருந்து ஜூன் மாதத்தின் தொடக்கம் வரையில் தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் நிலவுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் போல் தற்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளார்.

மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பயணத்தின் போது குடிநீரை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும்.

பருவக்கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும்போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்பு நிறத்தை தவிர்த்து) எடுத்து செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. இளநீர் போன்ற பானங்களை கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடகூடாது. பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்து கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தினால் இந்த ஆண்டு கோடை வெயில் தொடக்கத்தில் வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின்வயர்கள் உருகி தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்ளோடு இணைத்துள்ள ரெகுலேட்டர்களை இரவில் அணைத்து வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்துவிடவேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டுள்ளார்.