தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூனை இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக மாற்றியது 2022ம் ஆண்டு வெளியான புஷ்பா. இந்த படத்தின் முடிவிலே புஷ்பா 2ம் பாகத்துடன் படம் முடிக்கப்பட்டு இருக்கும்.
சுமார் 3 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் இன்று உலகெங்கும் வெளியானது புஷ்பா 2ம் பாகமான புஷ்பா தி ரூல். படத்திற்காக இருந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போலவே படத்தின் தொடக்க காட்சி அல்லு அர்ஜூனுக்கு பில்டப்புடன் இருந்தது.
புஷ்பாவின் கதை என்ன?
ஜப்பான் துறைமுகத்தில் முதல் பாகத்தில் பார்த்த புஷ்பா அந்தரத்தில் கயிற்றில் தொங்கியபடி அவரது அறிமுகம் இருக்கிறது. கடந்த பாகத்தில் முடிந்த புஷ்பா ( அல்லு அர்ஜூன்) ஷெகாவத் ( பகத் பாசில்) மோதல் எப்படி தொடர்கிறது? புஷ்பா படிப்படியாக எப்படி வளர்கிறான்? புஷ்பா முதலமைச்சருக்கும் ஏன் மோதல் உருவாகிறது? அதனால் புஷ்பா எடுக்கும் முடிவு என்ன? புஷ்பாவும் ஷெகாவத்தும் ஒருவருக்கு ஒருவர் போட்டுக் கொள்ளும் சவால் என்ன? மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டி ( ஜெகபதி பாபு)க்கும் புஷ்பாவுக்கும் எப்படி மோதல் உண்டாகிறது? என்பதை தெலுங்கு சினிமாவிற்கு ஏற்றாற்போல கமர்ஷியல் பேக்கேஜாக அளித்துள்ளார் இயக்குனர் சுகுமார்.
கடந்த படத்தில் போலவே இந்த படத்திலும் புஷ்பா கதாபாத்திரத்திற்கான பில்டப்பும், மாஸ் காட்சிகளும் சளைக்காமல் வைக்கப்பட்டுள்ளது. புஷ்பாவின் மாஸை காட்டுவதற்காகவும். தனது ஆட்களை வெளியில் கொண்டு செல்லும் போலீசார் தங்கள் வேலை பறிபோகும் என்று கெஞ்சும்போது புஷ்பா செய்யும் காரியங்களும் அல்லு அர்ஜூனின் ரசிகர்களை கைதட்ட வைக்கும்.
ஆடுபுலி ஆட்டம்:
அதேபோல, அல்லு அர்ஜூனின் சண்டை காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செம்மரங்களை கடத்துவதும், அதை போலீஸ் துரத்துவதும், கோயில் மற்றும் கிளைமேக்ஸ் சண்டை காட்சியும் ஆக்ஷன் படத்திற்கு ஏற்றாற்போல இருந்தது. பீட்டர் ஹெய்ன், கெச்சா கம்பக்டெ, ட்ராகன் ப்ரகாஷ் மற்றும் நபகண்டாவை இதற்காக பாராட்ட வேண்டும்.
படத்தின் முதல் பாதியில் புஷ்பாவிற்கும், ஷெகாவத்திற்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமாகவே நகர்கிறது. இதில் புஷ்பாவே வெல்வதும், ஷெகாவத் தோற்பதும் தொடர்கிறது. ஈகோ அதிகம் உள்ள அதிகாரியாக பகத் பாசில் இந்த படத்தில் வந்துள்ளார். இதுவரை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு மீது எப்போதும் விமர்சனங்கள் இருந்து வந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா ஓரளவு நடித்துள்ளார். சாமி சாமி என்று கணவனிடம் அன்பு காட்டும் இடத்தில் ஒரு சாதாரண மனைவியாக அவர் நம் கண்முன்னே தோன்றுகிறார்.
தனி ஆளாக தாங்கும் அல்லு அர்ஜூன்:
படத்தில் தனி ஆளாக தாங்கிக் கொண்டுச் சென்றிருப்பவர் அல்லு அர்ஜூன். முதல் பாகத்தில் காட்டியே அதே உடல்மொழியுடன் தன்னை சுத்தி நடக்க வேண்டியதை முடிவு செய்யும் சக்தியாக வளர்ந்து நிற்கும் நபராக படம் முழுக்க வருகிறார். படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் சமந்தா ம்ம்ம் சொல்றியா பாடலுக்கு வந்தது போல, இந்த படத்தில் இஸ்க் என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடியுள்ளார். ஆனால், சமந்தாவை விட ஸ்ரீலீலா சிறந்த டான்சர் என்றாலும் ம்ம்ம் சொல்றியா பாடலை இந்த பாடல் மிஞ்சவில்லை என்பதே உண்மை. அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு விருந்தாக படத்தின் 3ம் பாக அறிவிப்புடன் படம் முடிந்திருக்கிறது.
பலவீனம்:
படத்தின் பெரிய பலவீனமே படத்தின் நேரம் ஆகும். படம் 3 மணி நேரம் 20 நிமிடம் ஓடுகிறது. தற்போது வரும் படங்கள் எல்லாம் 2.30 மணி நேரத்திற்கு இல்லாத சூழலில் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என்பது மிக மிக அதிகம். எடிட்டர் நவீன் நூலி சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம். குறிப்பாக, இரண்டாம் பாதியில் சில காட்சிகளுக்கு கண்டிப்பாக கத்திரி போட்டிருக்கலாம். ஏனென்றால், படம் எந்த போக்கில் செல்கிறது என்பதே ஒரு கட்டத்தில் புரியாத சூழலாக இருந்தது.
தமிழ், மலையாளம் என இரண்டிலும் நடிப்பு அரக்கனாக உலா வரும் ஃபகத் பாசிலை இன்னும் நன்றாகவே பயன்படுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. பிரதான வில்லனான அவருக்கு காவல்துறை எஸ்.பி.யான அவருக்கு மாஸான வில்லன் காட்சிகளும், புஷ்பாவுக்கு நெருக்கடி தரும் காட்சிகளும் இன்னும் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோல, ஆக்ஷன் ஹீரோ புஷ்பா கிளைமேக்ஸ் சண்டையில் சூப்பர்ஹீரோ போல சண்டையிடுவதுதான் மிகவும் அதிகப்படியாக இருந்தது. முதல் பாகத்தில் புஷ்பா கதாபாத்திரத்திற்கு ஏற்ப அல்லு அர்ஜூன் சாமானியனாக பேசும் வசனங்கள் இந்த பாகத்தில் மிஸ்ஸிங். முதல் பாதியின் முக்கிய வில்லன் சுனில், அவரது மனைவி தாட்சாயினி இந்த படத்தில் வந்து வந்து போகிறார்கள்.
காத்திருக்கு 3ம் பாகம்:
முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக்கேஜோக அமைந்த கடந்த பாகம் போல இல்லாமல் இந்த படத்தின் இரண்டாம் பாதி குடும்ப பாங்காக அமைந்துள்ளது. முதல் பாதியில் குடும்ப சென்டிமென்ட் குறைவு என்று கூறியவர்களை நிறைவு செய்வதற்காக இப்படி முடிக்கப்பட்டிருக்கலாம். அடுத்த பாகத்திற்கான அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதியில் புஷ்பாவால் பாதிக்கப்பட்ட மங்களம் சீனு, அவரது மனைவி. ஜாலிரெட்டி இவர்கள் எல்லாம் பிரதாப் ரெட்டியுடன் ஒரு பக்கம் நிற்க, புஷ்பா தனது குடும்பத்துடன் நிற்க பகத் பாசில் ஒரு கட்டிடத்தை வெடிகுண்டால் வெடிக்க வைப்பதுடன் படம் முடிகிறது. நிச்சயம் படத்தின் டைமிங்கை இன்னும் குறைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
நடக்கும் வசூல் வேட்டை:
பகத் பாசில் வெடிக்கவைத்தது எதை? ஜப்பானுக்கு சென்ற புஷ்பா மீண்டும் நாடு திரும்புவது எப்படி? மத்திய அமைச்சர் பிரதாப் ரெட்டிக்கும் புஷ்பாவிற்கும் நடக்கும் மோதல் என்ன? புஷ்பாவை ஷெகாவத் எப்படி பழிவாங்கப் போகிறார்? என்ற கேள்விகளுக்கு புஷ்பா ரேம்பேஜ் 3ம் பாகம் பதில் சொல்ல உள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். சுகுமாருடன் இணைந்து ஸ்ரீகாந்த் விசா வசனங்கள் எழுதியுள்ளார். தமிழில் மதன் கார்த்திக் வசனம் எழுதியுள்ளார். மிரோஸ்லா குபா ப்ரோசேக்கின் கேமரா காடு, இருள் என படம் முழுக்க அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வசூலுக்கு முன்பே 100 கோடி வருவாயை ஈட்டியுள்ள நிலையில், படம் பட்ஜெட்டை எட்டிவிடுவது உறுதி.