மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான, பெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பிறகும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை, கனமழை புரட்டி போட்டு விட்டது. சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சூழலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகனமழை அல்லது கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, ஒகேனக்கல், சிறுவாணி மற்றும் இதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.