உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு இன்று அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை தீபம் இன்று மாலை மலை மீது தீபம் ஏற்றப்படவுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு 12.12.2024 முதல் 15.12.2024 வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல ஏதுவாக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது தடை செய்யப்பட்டு, இதனை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படைகள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம் திருவண்ணாமலை வரை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நேற்று முதல் 15 ஆம் தேதி வரையும், விழுப்புரம் திருவண்ணாமலை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலும், திருச்சியில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை சிறப்பு ரயிலும், காட்பாடியில் இருந்து விழுப்புரம் வழியாக சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.
காட்பாடியிலிருந்து விழுப்புரத்திற்கு மெமோ எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலும், தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலும், திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரத்திற்கு 13-ஆம் தேதி வரை சிறப்பு ரயிலும், 13ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மெமோ சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வரை மூன்று நாட்களுக்கு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ரயில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் நிலையில், வட மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது பேருந்து நிலையங்கள் ரயில் நிலையம் தொடங்கி கிரிவலப் பாதை கோயில் என லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர் இதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட இருக்கும் சூழலில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்..