Lok Sabha Election Star Candidate
Lok Sabha Election Star Candidate

மக்களவைத் தேர்தல் 2024 | திமுக vs அதிமுக vs பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் மோதும் தொகுதிகள்

5/5 (4)

மக்களவைத் தேர்தல் 2024: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை பார்க்கலாம்

தென்சென்னை

தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் களமிறக்கப்பட்டுள்ளார்.

கோவை

கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

நீலகிரி

நீலகிரி தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அதிமுகவின் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறங்கும் நிலையில், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, அதிமுக சார்பில் சந்திரமோகன் வேட்பாளராக உள்ள நிலையில், பாஜக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் களமிறங்குகிறார்.

நெல்லை

நெல்லை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழனும், பாஜக சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

மத்திய சென்னை

மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறனும், பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வமும் வேட்பாளராக களமிறங்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிகவேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வேலூர்

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் பசுபதியும் களம் காணும் நிலையில் பாஜக வேட்பாளராக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயபிரகாஷ், பாஜக சார்பில் நரசிம்மன் களமிறங்கும் நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது விரைவில் தெரியவரும்.