திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார் ருண விமோசனேஸ்வரர்.
உலகில் அனைவருமே கடன் பட்டவர்கள்தான் என்கிறது சாஸ்திரம். ‘நான் யாரிடமும் பத்துப்பைசா கூட கடனே வாங்கியது இல்லையே…’ என்று சிலர் சொல்லலாம். ஆனாலும் எல்லோருமே கடன் பட்டவர்கள்தான். பிறவிக்கடன் பட்டவர்கள்.
இந்தப் பிறவியை நாம் எடுத்திருப்பதே நம்முடைய கடனை அடைப்பதற்குத்தான். பிறவி என்பதே கடன் என விவரிக்கின்றன ஞானநூல்கள். நம் கடனையெல்லாம் தீர்க்கும் போது, நமக்குப் பிறவி இல்லை என்கிறது சாஸ்திரம். ஜோதிடமும் அப்படியே வலியுறுத்துகிறது.
ஆனால், எல்லா மனிதர்களும் பிறவி எனும் பெருங்கடனை எப்படி அடைப்பது, என்ன செய்வது என்பதையெல்லாம் அறிய முற்படுவதே இல்லை. மாறாக, பொருளாதாரம், பணம் முதலான கடனை வாங்கிவிட்டு, அதை எப்படி அடைப்பது, என்ன செய்வது என்றே தவித்து மருகின்றனர்.
கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் வாங்குவதற்கும் கடனை திருப்பிச் செலுத்துவதற்குமாக சில நியமங்களை வைத்திருக்கின்றன ஞானநூல்கள்.
நாம் ஒருவரிடம் கடன் வாங்குவதாக இருந்தால் திங்கட்கிழமைகளில் கடன் வாங்குவது நல்லது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். திங்கட்கிழமையில் கடன் வாங்கினால், அந்தக் கடன், மிகப்பெரிய பிரச்சினையாகவோ தீராக்கடனாகவோ இருக்காது. விரைவில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்திவிடுகிற சூழல்கள் உருவாகும், பொருளாதாரத்தில் மேன்மை அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அதேபோல், வாங்கிய கடனை திரும்பச் செலுத்துவதை செவ்வாய்க்கிழமை நாளில் செய்ய வேண்டும் என்கிறார்கள். வாங்கிய கடனை செவ்வாய்க்கிழமையன்று திருப்பிக் கொடுத்தால், கடனில் இருந்து மீள்வது சீக்கிரமே நடக்கும். கடனில் முழுத்தொகை கொடுக்காமுடியாவிட்டாலும் செவ்வாய்க்கிழமையன்று கொஞ்சம் கொஞ்சமாகக் கடனைக் கொடுத்தால், விரைவில் எல்லாக் கடன்களையும் அடைக்கலாம். கடன் சிக்கல்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கும்பகோணம் அருகில் உள்ளது திருச்சேறை. இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீருண விமோசனேஸ்வரர். இந்தத் தலத்தின் இறைவனை மார்க்கண்டேயர் வழிபட்டு பிறவிப்பெருங்கடனைத் தீர்த்துக்கொண்டார். பதினாறாவது வயதில் மரணம் என்றிருந்த நிலையே மாறிப்போனது. என்றும் பதினாறு என்று சாகாவரமே கிடைத்தது என்கிறது புராணம்.
அத்தகைய திருத்தலமான திருச்சேறைக்கு வந்து, ஸ்ரீருணவிமோசனேஸ்வரரை, சார பரமேஸ்வரரை வணங்கி வழிபட்டாலும் கடன் தொல்லையில் இருந்து மீண்டுவரலாம் என்பது ஐதீகம்.
திருச்சேறை தலத்தில் ருண விமோசனேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அதேபோல், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ருண விமோசனேஸ்வரருக்கு சந்நிதி இருக்கிறது. இந்தத்தலத்துக்கு வந்தும் மனதார வேண்டிக்கொள்ளலாம்.
ஏதேனும் ஒரு திங்கட்கிழமையன்று, திருச்சேறை கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ருண விமோசனேஸ்வரரையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்யுங்கள். கடன் பிரச்சினையில் இருந்து மீளச்செய்து அருளுவார் ருண விமோசனேஸ்வரர்.
அமைவிடம் : கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் – குடவாசல் செல்லும் சாலையில் 15 கி.மீ., தொலைவிலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.