kathirigai Podi Kari
kathirigai Podi Kari

கத்திரிக்காய் பொடி கறி செய்முறை

தலைப்புச் செய்திகள்

5/5 (3)

பல மருத்துவ குணம் கொண்ட கத்திரிக்காயை வைத்து பல விதங்களில் காய்களையும் குழம்புகளையும் நாம் செய்வோம். எப்படி தான் நாம் பார்த்து பார்த்து செய்தாலும் கத்திரிக்காய் என்றதும் அது பிடிக்காது என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் அதைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு செய்யக்கூடிய ஒரு கத்திரிக்காய் பொடி கறியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கத்திரிக்காய் பெண்களுக்கு ஆண்களுக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தை மென்மையாக்குகிறது. மேலும் கத்திரிக்காயில் விட்டமின் சி, இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டக்கூடியதாகவும், சளி, இருமலை குறைக்க கூடியதாகவும் திகழ்கிறது. மேலும் சிறுநீரக கற்களை கரைக்கும் வல்லமை இதற்கு உள்ளது. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்க்கு, கீழ்வாதம், பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், உடல் பருமன் போன்றவற்றை குணப்படுத்தக்கூடிய காயாக இந்த கத்திரிக்காய் திகழ்கிறது.

தேவையான பொருட்கள்

மூலப்பொருள்அளவு
கத்திரிக்காய் (Brinjal)1/4 கிலோ
நல்லெண்ணெய் (Sesame Oil)2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் (Groundnut Oil)2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் (Dried Red Chilies)20
கடலைப்பருப்பு (Bengal Gram)2 டேபிள் ஸ்பூன்
தனியா (Coriander Seeds)2 டேபிள் ஸ்பூன்
வேர்கடலை (Peanuts)2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள் (White Sesame Seeds)1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு (Mustard Seeds)1 டீஸ்பூன்
கருவேப்பிலை (Curry Leaves)ஒரு கொத்து (a bunch)
மஞ்சள் தூள் (Turmeric Powder)1/4 ஸ்பூன்
உப்பு (Salt)தேவையான அளவு (to taste)
புளி (Tamarind)2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் (Water)1/4 டம்ளர் (1/4 cup)
பெருங்காயம் (Asafoetida)1/2 ஸ்பூன்

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலெண்ணையை ஊற்ற வேண்டும். கடலை எண்ணெய் காய்ந்ததும் அதில் 15 காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, தனியா, தோல் நீக்கிய வேர்கடலை இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் வெள்ளை எள் சேர்த்து குறைந்தபட்சம் 4 நிமிடமாவது நன்றாக வதக்க வேண்டும். அனைத்தும் சிவந்த பிறகு எண்ணெயிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயுடன் மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவில் நல்லெண்ணெயை சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, போட்டு கடுகு பொரிந்ததும் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இதில் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல், தண்ணீர் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கத்திரிக்காய் நன்றாக வெந்த இதில் பெருங்காயத்தூளை சேர்த்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நாம் வறுத்து வைத்திருக்கும் பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து வைத்து அந்த பொடியையும் இதற்கு மேல் தூவி அதற்கு மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணையை ஊற்றி ஒரு முறை நன்றாக கொதிக்கவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு சுவையுடன் இருக்கக்கூடிய கத்தரிக்காய் பொடி கறி தயாராகிவிட்டது. இதையும் படிக்கலாமே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதற்காக காலையில் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான பானம். வேண்டா விருப்பமாக சாப்பிடக்கூடிய கத்திரிக்காயை கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையுடன் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.