Train tickets
Train tickets

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு ஒரு மணிநேரத்தில் எல்லாமே போச்சே

5/5 (5)

தீபாவளிக்கான ரயில் டிகெட்டுகள் விற்று தீர்ந்துள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இந்த டிக்கெட்டுக்களும் மிக விரைவாக விற்று தீர்ந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ‘இந்தியன் ரயில்வே’ முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே டிக்கெட் கிடைப்பதில் கடும் சிரமங்கள் இருக்கின்றன.

இதற்கு ரயில்வே நிர்வாகம்தான் முக்கிய பொறுப்பு என்றாலும், இந்த சிக்கலை தீர்க்க ரயில்வே நிர்வாகத்தால் மட்டுமே முழுமையாக முடியாது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், சென்னைதான் பிரதான நகரம். கிராமங்களிலிருந்து வேலை தேடி புலம் பெயர்பவர்களில் பெரும்பாலானோர் சென்னையை நோக்கித்தான் வருகின்றனர். இது சென்னையின் மக்கள் தொகை அடர்த்தியை அதிகரிக்கிறது. அதேபோல இவர்கள் விழா நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் எனில் அதற்கான ஏற்பாடுகள் போதுமானதாக இருக்க வேண்டும். இங்குதான் ரயில் சேவையின் தேவை வருகிறது. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு புலம் பெயரும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்பவாறு ரயில்கள் இல்லை என்பதுதான் எதார்த்தம். எனவே கிடைக்கும் ரயில்களில் டிக்கெட்கள் பதிவு செய்யப்படுகின்றன. இப்படியாக முன்பதிவுகள் வேகமாக நிரப்பப்படுகின்றன. தீபாளி, பொங்கல் என பல முக்கிய பண்டிகை நாட்களில் மிக வேகமாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் மாதம் 31ம் தேதி வருகிறது. ரயில் டிக்கெட்டுகளை பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பாக புக் செய்யமுடியும். அந்த வகையில் அக்.28ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, மலைக்கோட்டை உள்ளிட்ட ரயில்களிலும் கோவைக்கு செல்லும் சேரன், நீலகிரி ஆகிய விரைவு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு விரைவாக முடிந்தது. இதுதவிர, சென்னையில் இருந்து புறப்படும் பகல் நேர ரயில்களான வைகை, பல்லவன், குருவாயூர் ஆகிய ரயில்களிலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்திருக்கின்றன.

இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்.30ம் தேதிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.