Neivediya offered to God
Neivediya offered to God

இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்?

Rate this post

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்கப்படுகிறது? இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள்.

கண்ணன், குசேலர் இவர்கள் இருவரை பற்றிய கதைதான் இது. கண்ணனும் குசேலரும் சாந்திவனி ஆசிரமத்தில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள். இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இருவரின் குருகுல வாசம் முடிந்ததும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கண்ணன் துவாரகையின் அரசர் ஆனார். ஆனால் குசேலன் வறுமையில் கஷ்டத்துடன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.

குசேலர் வறுமையில் இருந்து நீங்க என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போது, குசேலரின் மனைவி தன் கணவருக்கு ஒரு யோசனை கூறினாள். என்னவென்றால், “உங்களின் நண்பர் கண்ணன் இப்பொழுது துவாரகையின் அரசனாக தானே இருக்கின்றார். அவரிடம் உதவி கேட்டால் நம் வறுமை நீங்க ஒரு வழியை கூறுவார் அல்லவா?” என்றவாறு குசேலனரின் மனைவி கூறினாள்.

ஆனால், குசேலருக்கோ வறுமை நிலையில் நண்பனை காண்பதற்கே தயக்கமாக இருந்ததோடு உதவி கேட்கவும் மனம் இல்லை. ஆனால் தன் மனைவியின் கட்டாயத்தினாலும், வறுமையை போக்க வேறு வழி இல்லாத காரணத்தினாலும் குசேலர் கண்ணனைக் காண துவாரகைக்கு புறப்பட்டார்.

குசேலர் தன் நண்பனை நீண்ட நாட்கள் கழித்து சந்திக்க போவதால், கண்ணனுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றார். குசேலருக்கோ வறுமை, என்ன செய்வது? பின்பு தன்னால் முடிந்த அவலை(அவல்) ஆசையோடு கண்ணனுக்கு வாங்கி சென்றார்.

குசேலருக்கு வறுமை என்பதால் கிழிந்த துணி உடன் நடைபயணமாக தனது பயணத்தை மேற்கொண்டார். துவாரகைக்கு வந்தடைந்தார். ஆனால் கண்ணனின் அரண்மனைக்கு வெளியில் இருக்கும் காவலர்கள் அவரை உள்ளே விட வில்லை. காரணம் குசேலர் கண்ணனை தன் நண்பன் என்று கூறுகின்றார்.

இவ்வளவு ஏழ்மையாக உள்ள ஒருவர் எப்படி அரசனான கண்ணனுக்கு நண்பனாக இருக்க முடியும் என்ற சந்தேகம் தான் காவலர்களுக்கு எழுந்தது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு குசேலர் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. குசேலர் வந்திருக்கும் செய்தியும் காவலர்கள் மூலம் கண்ணனுக்கு எட்டியது.

கண்ணன் ஓடி வந்து தனது நண்பனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்று, அமர வைத்து, தன் மனைவி ருக்மணியுடன் சேர்ந்து கண்ணனும், குசேலருக்கு பாதபூஜை செய்து, பின்பு விருந்து அளித்து, உபசரித்தனர். என்ன அற்புதம் அல்லவா இது.
விருந்து முடிந்ததும் கண்ணனும், குசேலரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். உடன் ருக்மணியும் உள்ளார். ருக்மணி கண்ணனைப் பார்த்து, “இவ்வளவு தூரம் உங்களைக் காண வந்துள்ள உங்கள் நண்பர் குசேலர், தங்களுக்காக எதுவுமே எடுத்து வரவில்லையா என்று கேட்டார்.”

ஆனால் குசேலர் அவலை கண்ணன் இடம் கொடுக்க வில்லை. ஏனென்றால் செல்வ செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு வெறும் அவலை எப்படி கொடுப்பது என்ற தயக்கம்தான். திரும்பத்திரும்ப கண்ணன் கேட்டதன் காரணமாக தயக்கத்துடன் அவலை, கண்ணனிடம் கொடுத்தார். குசேலரிடமிருந்து அதை வாங்கிய கண்ணன் அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டதும், குசேலரின் வீடு செல்வ செழிப்பில் நிரம்பியது. இரண்டாவது முறையாக வாயில் போட்டதும் வறுமைக்கான விடிவுகாலம் பிறந்தது. மூன்றாவது முறையாக வாயில் போடும்போது ருக்மணி தடுத்துவிட்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாமன வடிவில் வந்து ஒரு அடியில் விண்ணுலகையும் மறு அடியில் மண்ணுலகையும் மற்றும் மூன்றாவது அடியில் மகாபலியை முழுமையாக ஆட்கொண்டார். இதனால் தான் மூன்றாவது முறை கண்ணன் வாயில் அவலை போட்டுக் கொண்டால் எங்கே குசேலரை கண்ணன் ஆட்கொண்டு விடுவாரோ என்ற பயத்தில் தான் ருக்மணி மூன்றாவது முறை அவலை வாயில் போடும் போது அதனை தடுத்து விட்டாள்.

கண்ணன் ருக்மணியை பார்த்து, “எதற்காக நான் சாப்பிடுவதை தடுக்கின்றாய்” என்று கேட்கின்றார். அதற்கு ருக்மணி இவ்வாறாக பதில் கூறினாள். என்னவென்றால், “தங்களுக்குக் கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளானாலும் அது மகா பிரசாதம் தான்.

உங்கள் நண்பன் ஆசையோடு கொண்டு வந்த அந்த பிரசாதத்தை எனக்கு கொஞ்சம் கொடுக்கக் கூடாதா என்று கண்ணனிடம் கேட்கின்றாள்”. கண்ணன் மீதமுள்ள அவலை ருக்மணிக்கு பிரசாதமாக கொடுத்தார். குசேலர் கண்ணனுக்காக கொண்டுவரப்பட்ட அவலை ருக்மணி பிரசாதமாக உட்கொண்டாள்.

இந்த கதையின் மூலமாகத்தான் கடவுளுக்கு நாம் அளிக்கும் நெய்வேத்தியம், திரும்பவும் நமக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *