திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜாபாளையம் கிராமத்தில், சாதிப் பிரிவினை நிலவுகிறது. மாறன் (அரிசங்கர்) மற்றும் அவரின் சமூக மக்களும் தினமும் ஊர்த்தெரு ஆட்களால் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
அந்த கிராமத்திலுள்ள இரண்டு சாதியினருக்கும் பொதுவானதாக இருக்கும் கொட்டாங்கல் பாறையை, தன் வசமாக்க திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதிய மோதலை உருவாக்குகிறான் மாற்று சமூகத்தைச் சேர்ந்த வேடி (குரு ராஜேந்திரன்). அதன் உச்சமாக மாறனின் சமூகத்திற்குத் தண்ணீர் மறுக்கப்படும் சூழல் உண்டாகிறது. இந்த நிலையில் சண்டை போடும் இரு சமூக மக்களில் சிலரைக் கர்நாடக ஜூஸ் தொழிற்சாலைக்கு வேலைக்கு அழைத்துச் செல்கிறார் அதே ஊரைச் சேர்ந்த கான்ட்ராக்டர்.
அங்கே சாதி பிரச்சினையைத் தாண்டி இனவெறியைத் தூண்டும் வெறுப்பு பிரசாரத்தைச் செய்கிறது ஒரு அடிப்படைவாத கட்சி. தொழிற்சாலை முதலாளி தமிழ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பிரச்னைகள் ஆரம்பிக்கத் தொடங்குகின்றன. இதற்கிடையே மாற்று சாதியைச் சேர்ந்த தேவகி (சங்கீதா கல்யாண்) மாறனின் மீது காதல் கொள்கிறார். இந்த காதல் என்ன ஆனது? இனவெறியிலிருந்து தமிழ் மக்கள் தப்பித்தார்களா ? அவர்களுக்குள் இருக்கும் சாதிவெறி மோதல் எங்கே போய் முடிகிறது ? என்று பல கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த பராரி படத்தின் கதை.
இடதுசாரித் தோழரின் துணையுடன் பக்குவமாகப் பிரச்னைகளைக் கையாள்வது, காதலிலிருந்து விலகி நிற்பது என முதிர்ச்சியான நடிப்பைத் தர முயன்றிருக்கிறார் நடிகர் அரிசங்கர். எமோஷலான காட்சிகளில் அது கைகூடினாலும், ஆக்ரோஷமான காட்சிகளில் சற்றே தடுமாறியிருக்கிறார். நாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் நாயகியாகச் சங்கீதா கல்யாண். கிளைமாக்ஸ் காட்சியின் வலுவைத் தாங்கும் அளவுக்கான சிறப்பானதொரு நடிப்பை தன் முதல் படத்திலேயே வழங்கியிருக்கிறார். சாதிப்பெருமையை தூக்கிக்கொண்டு வரும்படியாக பிரச்னை கிளப்பும் பாத்திரத்தில் பிரேம்நாத், இனவெறியைச் சுவாசமாகக் கருதி வெறுப்பேற்றும் வேடத்தில் புகழ் மகேந்திரன் என தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை இருவரும் திறம்படச் செய்திருக்கிறார்கள். காதல் ஜோடிகளாக வருகிற இருவரின் நடிப்பிலும் குறையேதுமில்லை.
கிராமப்புற வாழ்க்கை மற்றும் கர்நாடக தொழில்துறை சூழலின் வேறுபாட்டை ஒளிப்பதிவு சிறப்பாகக் காட்டுகிறது ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு. இருப்பினும் மிகவும் அழுத்தம் நிறைந்த கதையின் மையமாக இருக்கும் கிராமத்தை இன்னும் தெளிவாகப் பதிவு செய்திருக்கலாம். மீண்டும் மீண்டும் காட்டப்படும் தலைவர்களின் ஓவியங்கள், புகைப்படங்கள் மட்டுமே ப்ரேமை நிரம்பியிருக்கிறது.
பன்றி சேஷிங் காட்சி, சண்டைக் காட்சிகள் ஆகியவற்றைப் படத்தொகுப்பாளர் சாம் ஆர்டிஎக்ஸ் சிறப்பாகக் கோத்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் ‘உன் சாமி என் சாமி வேடியப்பன்’ என்ற பாடல் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சந்தை, கர்நாடக ஜூஸ் ஆலை மற்றும் பார்க்கின்ற சுவரில் எல்லாம் ஓவியங்கள் என டபுள் டூட்டி பார்த்திருக்கிறார் கலை இயக்குநர் ஏ.ஆர். சுகுமார். சண்டைக் காட்சிகளை உண்மைக்கு நெருக்கமாக வடிவமைத்திருக்கிறார் ஃபயர் கார்த்தி.
ஒரே கூலித் தொழில், ஒரே குலசாமி, வறுமை இப்படி பல ஒற்றுமைகள் இருந்தாலும், சாதியின் அடிப்படையில் பிரிந்திருக்கும் இருபிரிவினர் என்ற மையக்கருத்தைப் படம் ஆரம்பித்த சில நொடிகளிலே தெளிவாகப் புரிய வைத்துவிடுகிறார்கள். ஆனால் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருப்பது கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. படத்தில் சொல்லப்படுகிற சமத்துவ நோக்கம் எல்லாமே சிறப்பு. ஆனால் அது கலைப்படைப்பாக மாறுவதில் சிலபல சிக்கல்கள் எட்டிப்பார்க்கின்றன. ஏற்கெனவே மெதுவாக நகரும் கதையில் பாடல்கள் தடைகளாக உள்ளன. திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சமூகப் பிரச்னைகளை வெளிக்கொணர்வதில் நம்பிக்கை அளிக்கிறார் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி. சாதி, வர்க்கம், இனவெறிக்கு எதிராகப் பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார். சாதியை வைத்தும் நடக்கிற அரசியல் அதனால் யார் பயனடைகிறார், இவற்றால் எளியமக்களின் வாழ்க்கையில் ஏற்படுகிற இழப்பு என அனைத்திலும் மக்களின் கவனத்தை ஏற்படுத்த முயன்று அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டிருக்கிறார். பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வைப் பதிவு செய்யவேண்டிய இடங்களில் அந்த மக்களின் கண்ணியம் பாதுகாக்கப்படவேண்டும்.
கதைக்கு மிகவும் தேவை என்கிற இடங்களில் அந்த கண்ணியத்தை விட்டுக்கொடுக்கிறோம் என்றால், அவ்வாறு வைக்கப்பட்ட காட்சி பார்வையாளர்களின் மனதில் அதிர்வலையை ஏற்படுத்தவேண்டும். ஆனால் இங்கே அப்படி அதிர்வலையை ஏற்படுத்தும் காட்சிகள் இருந்தும், திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளால் அது வலுவிழந்து போகிறது. தமிழக வட மாவட்ட கிராமத்தில் நிலவுகிற சிக்கலின் புள்ளியை கவனிக்க வைத்தமைக்காகவும், குறிப்பிட் இனக்குழுவையே எதிரிகளாக சித்தரிக்காமல் எல்லா நிலத்திலும் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எளியவர்களுக்கு உடன் நிற்கும் நம்பிக்கையை விதைத்ததற்கும் படக்குழுவைப் பாராட்டலாம்.
Pingback: சூது கவ்வும் 2 திரைவிமர்சனம் | சினிமா, திரை விமர்சனம் Latest News Stories from Thiruvarur