ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக நாளை (28.03.2024) முதல் சனிக்கிழமை வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
வரும் 29 ஆம் தேதி புனித வெள்ளி, அடுத்தடுத்த நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளாக வருவதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த 3 நாட்களில் பல ஊர் மக்களும், பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளதால் கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்க திட்டமிட்டுள்ளது.
வரும் 28 ஆம் தேதி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 505 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 300 பேருந்துகளும் சனிக்கிழமை 345 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
இதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை,வேளாங்கண்ணி,ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28 முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 120 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதேபோல் பெங்களூரு,திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் சொந்த ஊர் சென்ற பயணிகள் மீண்டும் திரும்ப தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.