சர்க்கரைவள்ளி கிழங்கில் புரதச்சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, விட்டமின் ஏ, சி, பி6, மக்னீசியம், காப்பர், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்கிறது. மேலும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண் பார்வை சிறப்பாக செயல்படும். மூளை செயல்பாடு அதிகரிக்கும். புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவுகிறது.
தேவையான பொருட்கள்
பொருள் | அளவு |
---|---|
சர்க்கரைவள்ளி கிழங்கு மசித்தது | 1 கப் |
வெல்லம் | 3/4 கப் |
ஏலக்காய் | 10 கிராம் |
முந்திரி | 25 கிராம் |
கோதுமை மாவு | 1 கப் |
எண்ணெய் | பொறிப்பதற்கு தேவையான அளவு |
செய்முறை
செய்முறை முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக வேக வைத்து எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். மசித்த இந்த சக்கரவள்ளி கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் வெள்ளம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் மற்றும் முந்திரியை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த பொடியையும் சர்க்கரைவள்ளி கிழங்குடன் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கிழங்கு கெட்டியான தன்மை வரும் அளவிற்கு சிறிது சிறிதாக கோதுமை மாவை அதில் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதில் நெய்யில் வதக்கிய தேங்காய் துருவலையும் சேர்த்து போடலாம். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
சப்பாத்தி மாவு பதத்தை விட சிறிது இலகுவாக இருக்க வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும்.எண்ணெய் நன்றாக சூடான பிறகு நாம் பிணைந்து வைத்திருக்கும் சக்கரவள்ளி கிழங்கு மாவை வடையளவிற்கு சிறிது சிறிதாக தட்டி போடலாம். அல்லது உருண்டையாக உருட்டியும் போடலாம். அல்லது நாம் போண்டா போடுவது போல் சிறிது சிறிதாக எடுத்தும் போடலாம். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நமக்கு பிடித்தமான வடிவத்தில் இந்த அப்பத்தை நாம் எண்ணையில் போட்டுக்கொள்ள வேண்டும். நன்றாக வெந்து சிவந்த பிறகு அதை அப்படியே எடுத்து தட்டில் வைத்து பரிமாறி விடலாம். மிகவும் சுவையான இனிப்பான சக்கரவள்ளி கிழங்கு அப்பம் தயாராகிவிட்டது.