ஜவ்வாது மலையைச்சேர்ந்த 23 வயதான பழங்குடியினப் பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (வயது23). இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று பின்னர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ளார்.
படித்துக்கொண்டிருக்கும் போது இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது.இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தேர்வுக்கு முந்தைய நாளே ஸ்ரீபதிக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தாலும், தேர்வு எழுதுவதில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி தனது கணவர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் பிரசவம் ஆன 2வது நாளில் காரில் பயணம் செய்து சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இது குறித்து ஐவ்வாது மலையில் பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியை மகாலட்சுமி என்பவர் தனது சமூகவளைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி “பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி ஸ்ரீபதி எனவும் ஜவ்வாதுமலையில் பிறந்து, ஏலகிரி மலையில் கல்வி கற்று, பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று மலையும், மாவட்டமும், தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா (23),அவருடைய இனமா, அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம். ஆனால் நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன். இந்தத் தகவலைக் கேட்டபோது, ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு இரண்டுநாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்.” என்றார்.
அதோடு “மருத்துவரின் ஆலோசனைப்படி வேறெப்படி பத்திரமாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன். “(பரமு,ஸ்ரீபதி இணையரின் நண்பர் & ஒரே ஊர்). மற்றபடி அவர் சென்றாரா இல்லையா என்றுகூட கேட்கவில்லை. யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை சென்றார். தேர்வு எழுதினார். இதோ வெற்றிவாகையும் சூடியிருக்கிறார். உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் “ஏய் …எப்புட்றா?” என்று சொல்வதற்கு முன் தொண்டைக்குழிக்குள் திக் திக் அடிக்கிறது.
இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று. அதைவிட பெருமைப்படவும், பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர். புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார்.” என பாராட்டியுள்ளார்.
திருமணமாகிய இளம்வயதில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசவத்துக்கு அடுத்தநாள் ஜவ்வாது மலையில் இருந்து சென்னை வரை சென்று தேர்வெழுதி வென்றும் காட்டிய பழங்குடியினப் பெண்ணின் கதை, கேட்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Pingback: நீட் 2024: நீட் நுழைவு தேர்வு நாளை தொடக்கம் | செய்திகள் Latest News Stories from Thiruvarur