நம்ம ஊரில் பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன? என எப்போதாவது நீங்கள் யோசிச்சிருக்கீங்களா? அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு எழுந்திருந்தால் இந்த பதிவில் அதற்கான விடையை பார்க்கலாம்.
தொலைவில் இருந்து கூட நம்மால் மஞ்சள் நிறத்தை மிக எளிதாக காண முடியும். மழை, மூடுபனி ஆகிய சூழல்களிலும் கூட மஞ்சள் நிறத்தை நாம் தொலைவில் இருந்து எளிதாக பார்க்கலாம். அதுமட்டுமல்லாது, பல்வேறு நிறங்களை நாம் ஒன்றாக பார்க்கும்போது, மஞ்சள் நிறம்தான் நமது கவனத்தை முதலில் ஈர்க்க கூடியதாக இருக்கும்.
அத்துடன் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மஞ்சள் நிறத்தின் பக்கவாட்டு புற பார்வை (Lateral Peripheral Vision), சிகப்பு நிறத்தை காட்டிலும் 1.24 மடங்கு அதிகமானது. தலையை திருப்பாமலோ அல்லது கண்களை நகர்த்தாமலோ நம்மை சுற்றி உள்ள பொருட்களை பார்க்க கூடிய நிலைதான் புற பார்வை என குறிப்பிடப்படுகிறது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் நீங்கள் நேராக பார்க்கவில்லை என்றாலும் கூட, உங்களால் மஞ்சள் நிறத்தை எளிதாக காண முடியும். அதாவது உங்களுக்கு பக்கவாட்டில் மஞ்சள் நிற வாகனம் வருகிறது என வைத்து கொள்வோம். அதை நீங்கள் நேருக்கு நேராக பார்க்கவில்லை. இருந்தாலும் பக்கவாட்டில் மஞ்சள் நிற வாகனம் வந்து கொண்டிருப்பதை உங்களால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
இதன் காரணமாகதான் பள்ளி பேருந்துகளில் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது.எனவே குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டிற்கும் பாதுகாப்பாக சென்று வர முடியும். அதே நேரத்தில் பள்ளி பேருந்துகளை எப்படி இயக்க வேண்டும்? என்பது தொடர்பாக சில வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி பள்ளி பேருந்து என்ற வார்த்தை பேருந்தின் முன்பும், பின்பும் கண்டிப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஒரு வேளை பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டதாக இருந்தால், பள்ளி பணி என்பது கண்டிப்பாக சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டும்.