Sudha Judge

குடிசை வீட்டில் பிறந்து நீதிபதியான கூலித் தொழிலாளி மகள்

5/5 - (2 votes)

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கிராமத்தில் குடிசை வீட்டில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகள் சுதா நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். தனது வெற்றிக்கு தாய்மாமா முக்கிய காரணம் என்பதை பூரிப்புடன் நீதிபதியாகி உள்ள சுதாவின் பேட்டி காண்போரை நெகிழ வைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாளாநல்லூரை சேர்ந்த கணேசன் சந்திரா தம்பதிக்கு 3 மகள்களும். ஒரு மகனும் உள்ளனர். கணேசன் கூலி வேலை செய்து வருகிறார். இவரது கடைசி மகள் தான் சுதா. இவர் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

12ம் வகுப்பு முடித்த உடன் திருவாரூர் அரசு திரு.வி.க. கல்லூரியில் பி.எஸ்சி. பட்டம் பெற்றுள்ளார். பின்னர் சட்டம் படிக்க விரும்பியவர், திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு கடந்த 5 ஆண்டுகளாக திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகியிருக்கிறார். மொத்தம் 245 நீதிபதி காலிப்பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 237 பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். இதில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சுதாவும் ஒருவர் ஆவார். சுதாவின் வீடு மிகவும் சிறிய குடிசை வீடு ஆகும். ஏழ்மை நிலையிலும் படித்து முன்னேறி நீதிபதியானதை பலரும் பாராட்டி வருகிறார்கள், இதனிடையே சுதா அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாளாநல்லூர் தான் என் சொந்த ஊர், நான் 2018ம் ஆண்டு என்னுடைய சட்டப்படிப்பை முடித்துவிட்டு 2023 வரை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் அட்வகேட் மனோகரன், மற்றும் அருள் செல்வம் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றி வந்தேன்.

2023ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு பெரிதாக எந்த ஒரு பேமிலி பின்புலம் மற்றும் பணம் சப்போர்ட் கிடையாது. பெரிய பெரிய அகடாமிக்கு எல்லாம் போய் லட்சங்களில் பணம் கட்டி பாஸ் பண்ற அளவிற்கு எனக்கு நிதி ஆதாரம் இல்லை.

என் அப்பா அன்றாடம் கூலி வேலைக்கு போகின்ற, சாதாரண கூலித்தொழிலாளி தான்.. ஒரு வைராக்கியத்துடன் படித்தேன். என் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவர படித்தேன். எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறோம்.. எனக்கு வந்து என் தாய்மாமா உறுதுணையாக இருந்தார். நான் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து மாமா உறுதுணையாக இருந்தார்.. என் தாய் மாமாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. என்ன மாதிரியான பிள்ளைங்க எல்லாம் இந்த மாதிரி ஒரு போட்டித்தேர்வை எழுத முடியுமா? எங்கள் மாதிரி ஆட்கள் இந்த பதவியில் உட்கார முடியுமா என்ற எண்ணத்தையே தகர்த்து எறிய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படித்தேன். இரண்டு விஷயத்தை பண்ணியிருக்கேன். பெரிய பெரிய அகடாமியில் போய் படித்தால் தான் நீதிபதியாக முடியும் என்ற எண்ணத்தை உடைத்துள்ளேன்.. என்னதான் படித்தாலும் பெரிய பெரிய ஆபிசர்ஸ் படித்தால் தான் அதற்குள் போக முடியும் என்கிற எண்ணத்தையும் நான் உடைத்திருக்கிறேன்.

என்னோட இந்த வெற்றி வந்து என்னை மாதிரி மிடில் கிளாஸ் பேமிலியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் நீதிபதி தேர்வுக்காக வருசக்கணக்கில் எல்லாம் படிக்கவில்லை. வெறும் நான்கு மாதம் தான் படித்தேன். நான்கு மாதம் படித்து இந்த பதவிக்கு வந்துள்ளேன் என்றால், என்னை படிக்க வைத்து எனக்கு பயிற்சி கொடுத்த திருத்துறைப்பூண்டி கோர்ட் நீதிபதி தான் காரணம்.. எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இதேபோல் வக்கீல் சங்க தலைவர் அருள்செல்வன் அவர்கள் ஆரம்பித்த பயிற்சி வகுப்பும் முக்கிய காரணம்” இவ்வாறு நீதிபதி சுதா கூறினார். இதனிடையே திருவாரூரைச் சேந்த அரசு பள்ளி ஆசிரியர் செல்வம். “தாய்மாமன் எனும் பந்தம்” என்று கூறி நீதிபதியாகி உள்ள சுதாவின் பேட்டி வீடியோவை சமூக வலைளதத்தில் பதிவிட்டுள்ளார். அதை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

Related Post