சென்னையில் புயல், கனமழையால், விமான நிலையத்தில் இன்று (நவ.,30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் வந்த ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதால், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து இன்று எந்த விமானங்கள் இயக்கப்படாது என இண்டிகோ விமான நிர்வாகம் அறிவித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். பலத்த காற்றுடன் கூடிய கனமழை என மோசமான வானிலை நிலவுவதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் காணப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.,30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.