Thiruvarur Chariot
Thiruvarur Chariot

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பணி தீவிரம்

5/5 - (2 votes)

தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்ட விழாவுக்கு ஆழித்தேர் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேர் தயாரிக்கும் பணி தீவிரம். அந்தப் பணிகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம்: திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் தியாகராஜ சுவாமி சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமயக் குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத்திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கோயில் மூலவராக வன்மீகநாதரும் உற்சவரராக தியாகராஜ சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க அந்த கோயிலில் தற்போது ஆழித்தேரோட்ட விழாவை ஒட்டி ஆழித்தேர் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தக் கோயிலில் ஆழித்தேர் ஆனதே ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் நிகழ்ச்சியானது நடைபெற்றது. பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா தொடக்கமாக பிப்.27 காலை ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் உள்ள கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உள்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடி அசைந்தாடியபடி ஆரூரா தியாகேசா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க ஆழித்தேர் நகர்ந்து செல்லும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.

ஆழித்தேர் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் இதற்காக ஆழித்தேரின் கண்ணாடி கூண்டுகள் ஏற்கனவே பிரிக்கப்பட்டு தேர் கட்டுமான பணிகள் துவங்கியுள்ள நிலையில் தற்போது தேரின் மேற் பகுதியில் பனஞ்சப்பைகளை கொண்டு கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறைகட்டளை பரம்பரை அறங்காவலர் ராம் தியாகராஜன், உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் அழகியமணாளன் ஆகியோர் மேற்பார்வையில் பணியாளார்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் புகழ்பெற்ற ஆழி தேரோட்டம் வரும் மார்ச் மாதம் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 24ம் தேதி பங்குனி உத்திர தீர்த்தவாரியும், மார்ச் 25ம் தேதி பாத தரிசனமும் நடைபெறுகிறது.