Tiruvannamalai Karthigai Deepam Preparations
Tiruvannamalai Karthigai Deepam Preparations

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் கொட்டும் மழையிலும் தீவிர ஏற்பாடுகள்

5/5 (9)

புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இதன் உற்சவ நிகழ்வான தீபத்திருவிழா நாளை (டிசம்பர் 13) நடைபெற உள்ளது.

நாளை (டிசம்பர் 13) அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, பின்பு மாலை 6:00 மணி அளவில் தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 2668 அடி உயரம் கொண்ட தீப மலை மீது 5 3/4 அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்ட மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொப்பரையை மலை மீது எடுத்துச் செல்கின்றனர்.

காலம் காலமாக எடுத்துச் செல்லும் 100 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6:00 மணி அளவில் மலையேற துவங்கினார்கள். முன்னதாக மலைச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் தமிழ்நாடு அரசு பக்தர்களுக்கு மலையேற அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீபம் ஏற்றும் கோயில் குழுவினருக்கு மட்டும் அரசு, மலையேற அனுமதி வழங்கியது. கொட்டும் மழையிலும் அந்த குழுவினர் கொப்பரையை மலைமீது எடுத்து செல்கின்றனர். மேலும் மழை வருவதை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்பே கணிக்கப்பட்டதால் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்கள் கட்டாயம் குடை, ரெயின் கோட் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் வருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.