ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட்டை முந்திய இளம் வீரரான ஹாரி ப்ரூக் நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் சரிவை சந்தித்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இன்னொரு பக்கம் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி கடைசி நாளில் அசத்தல் வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட மாதங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த ஜோ ரூட் இம்முறை 897 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் இங்கிலாந்து அணியின் 25 வயது இளம் வீரரான ஹாரி ப்ரூக் 898 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் விளாசியுள்ள 8 டெஸ்ட் சதங்களில் 7 டெஸ்ட் சதங்கள் வெளிநாடுகளில் அடிப்பட்டவை தான்.
இதன் மூலமாக ஹாரி ப்ரூக் புதிய சாதனையை படைத்துள்ளார். அதேபோல் இந்திய அணிக்கு எதிராக 140 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட் 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 3 இடங்கள் முன்னேறி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் 3 இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேபோல் நட்சத்திர வீரரான விராட் கோலி 6 இடங்கள் சரிந்து 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 இடங்கள் சரிந்து 31வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இன்னொரு பக்கம் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.
4வது இடத்தில் அஸ்வின் ஒரு இடம் சரிந்து 5வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் முகமது சிராஜ் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 25வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது ரசிகர்களிடையே தொடர் விவாதமாகி வருகிறது.