Train test between Tiruvarur Karaikudi
Train test between Tiruvarur Karaikudi

திருவாரூர் காரைக்குடி இடையே 121 கிமீ வேகத்தில் ரயில் சோதனை

5/5 (2)

திருவாரூர்: திருவாரூர் – காரைக்குடி இடையே 121 கிமீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் தண்டவாளத்திற்கு அருகே செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்து உள்ளது.

திருவாரூர் – காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த சுமார் 3 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, எர்ணாகுளம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியாக குறைவான எண்ணிக்கையில் ரயில்கள் சென்று வருகின்றன. இதனை அதிகரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதேபோன்று கடந்த ஆண்டு திருவாரூர் – காரைக்குடி, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி மற்றும் தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை, மன்னார்குடி – பட்டுக்கோட்டை ஆகிய ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் தொடர்பாக ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அவ்வப்போது திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதையின் உறுதித் தன்மையை ஆராய அதிவேகத்தில் ரயில்களை இயக்கி சோதனையிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 11.25 மணிக்குள் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி ரயில்பாதையிலும் நண்பகல் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குள் திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை – காரைக்குடி ரயில் பாதையிலும் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றும் மீண்டும் திருவாரூர் – காரைக்குடி இடையே அதிவேகத்தில் ரயிலை இயக்கி உறுதித்தன்மையை ஆராய இருக்கிறது ரயில்வே. இருப்புபாதை உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் வகையில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ஓ.எம்.எஸ். அதிவேக ரயில் சோதனை ஓட்டம் திருவாரூர் – காரைக்குடி இடையே இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக ரயில் பாதை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதைகளை கடப்பது, ரயில்பாதை அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது, மூடி இருக்கும் ரயில்வே கேட் வழியாக நடந்து செல்வது, இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, வேகமாக செல்லும் ரயில் அருகில் சென்று செல்போன் மூலம் போட்டோ, வீடியோ, செல்ஃபி எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் ரயில் பாதை அருகே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.