2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதும் போட்டிக்கு முன்பும், பின்பும் சிஎஸ்கே மற்றும் அந்த அணியின் மூத்த வீரர் தோனி குறித்தே அனைவரும் பேசினார்கள்.
இந்தப் போட்டியில் களமிறங்கிய தோனி இளம் வீரர்களைப் போல அதிரடி ஆட்டம் ஆடி 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்து மிரள வைத்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்த போதும் அடுத்து ஆடிய லக்னோ அணி எளிதாக சேஸிங் செய்து 19 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது.
எனினும் போட்டிக்கு பின் அனைவரும் தோனியின் பேட்டிங் குறித்தே பேசினர். லக்னோ அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தோனி குறித்து தனது மனதில் இருந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பூரன், எப்படி தங்கள் அணியில் ஒரு காலத்தில் பிரையன் லாரா புகழ்பெற்று இருந்தாரோ, அதே போல தோனி இந்தியாவின் தேசிய ஹீரோவாக இருக்கிறார் எனக் கூறினார்.
“இது இந்த சீசன் மட்டுமல்ல, ஒவ்வொரு சீசனிலும். தோனி பேட்டை எடுத்துக் கொண்டு உள்ளே வரும்போது வெளியே மஞ்சள் கடல் காத்திருக்கிறது. இதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் ஒரு தேசிய ஹீரோ,” என்று நிக்கோலஸ் பூரன் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார். மேலும், “பிரையன் லாராவின் காலத்தில் நாங்கள் விளையாடவில்லை; அப்போது எல்லோரும் அவருக்கு தீவிர ரசிகர்களாக இருந்தார்கள். ஆனால் அப்படி ஒரு காட்சியை இங்கே காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த நிலையில் இருப்பது நன்றாக இருக்கிறது, ஆனால் அவருடன் ஒரே மைதானத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, அந்த தருணங்களை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். தோனியுடன் ஒன்றாக ஆடினோம் என்பதை நாங்கள் எங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சொல்ல முடியும்” என்று பூரன் கூறினார்.