டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்து புதிய வரலாறு படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. டெல்லி அணி தரப்பில் கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீச அழைக்கப்பட்டார்.
இந்த ஓவரின் 2வது பந்திலேயே சிக்ஸ் அடித்த ட்ராவிஸ் ஹெட், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து கடைசி பந்தில் அபிஷேக் சர்மாவும் பவுண்டரி அடிக்க, முதல் ஓவரிலேயே 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. முதல் ஓவரிலேயே அதிக ரன்கள் சென்றதால், 2வது ஓவரை வீச முகேஷ் குமார் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிஷப் பண்ட் வித்தியாசமான அட்டாக் செய்கிறேன் என்ற பெயரில் லலித் யாதவை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
அந்த ஓவரில் ட்ராவிஸ் ஹெட் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் சேர்க்கப்பட, நார்கியே வீசிய 3வது ஓவரில் ட்ராவிஸ் ஹெட் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்து 22 ரன்களை விளாசினார். இதன் மூலமாக 16 பந்துகளில் ட்ராவிஸ் ஹெட் அரைசதத்தை எட்டி சாதனை படைத்தார். இதன்பின் மீண்டும் லலித் யாதவ் 4வது ஓவரை வீச, அந்த ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. வேறு வழியில்லாமல் குல்தீப் யாதவ் அட்டாக்கில் வர, அந்த ஓவரிலும் 20 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஐதராபாத் அணி 103 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலமாக 5 ஓவர்களிலேயே சதம் விளாசிய முதல் அணி என்ற புதிய சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிரான 6 ஓவர்களில் சிஎஸ்கே அணி 100 ரன்கள் சேர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 125 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த 6 ஓவர்களில் மொத்தமாக 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.