Most Searched Celebrities On Google
Most Searched Celebrities On Google

Year Ender 2024: பூனம் பாண்டே முதல் ஹர்திக் பாண்டியா வரை கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் லிஸ்ட்

5/5 (10)

இந்தியர்களால் கூகிள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய பிரபலங்கள் யார் யார் என்பதையும் கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. வாங்க இந்த சுவாரசிய லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காங்க என்பதை பார்ப்போம்.

கூகுள் இணையத்தளத்தில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென் 10ம் இடத்தை பிடித்துள்ளார். நடந்த முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இவரின் அதிரடியான விளையாட்டு அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்தது. இதன் மூலம் கோடானகோடி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் டாப் 10 லிஸ்டில் 9ம் இடத்தில் இளம் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா உள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதிராபாத் அணிக்காக விளையாடிய இவர் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசி கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் குறைந்த பந்துகளில் சதம் விளாசி ஒட்டுமொத்த இந்தியர்களையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார்.

இந்த லிஸ்டில் 8ம் இடத்தில் முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் இடம் பிடித்துள்ளார். இவருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் கடந்த ஜூலை மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அப்போது யார் இந்த ராதிகா மெர்ச்சண்ட் என்று இந்திய மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்டார்.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. புற்றுநோயால் தான் இறந்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பி இந்திய மக்களை பதறவைத்தவர் இவர். இதன் மூலம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கிரிக்கெட் வீரர் ஷஷாங்க் சிங். அதே போல் ஒரே போட்டியில் 150 ரன்களும், 5 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கூகுளில் அதிக தேடப்பட்ட பிரபலங்களின் லிஸ்டில் 6ம் இடத்தை பிடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பவன் கல்யாண். சினிமாவில் கலக்கிய இவர் அரசியலிலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கும் பவன் கல்யாண், இந்த லிஸ்டில் 5ம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த லிஸ்டில் 4ம் இடத்தில் அதிரடி கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா உள்ளார். நடாஷா ஸ்டான்கோவிக் உடனான விவாகரத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விவகாரத்தை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கையை பற்றி மக்கள் ஆர்வமுடன் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

இந்த டாப் 10 லிஸ்டில் 3ம் இடத்தை லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் இடம் பிடித்துள்ளார். மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஹாஜிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு சிராக் பாஸ்வான் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த லிஸ்டில் பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் 2ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், என்டிஏ கூட்டணிக்கு மாறி அரசியல் களத்தை சூடுபிடிக்கவைத்தார்.

2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் லிஸ்டில் முதல் இடத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளார். நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் விளையாடிய இவர் வெறும் 100 கிராம் எடை கூடியதால் இறுதி போட்டியில் விளையாட ஒலிம்பிக் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து விடைபெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்.