Milagu Kuzhambu
Milagu Kuzhambu

சளி இருமலில் இருந்து விடுவிக்கும் காரசாரமான மிளகு குழம்பு

5/5 (5)

குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், சளி, இருமல் பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல காரசாரமான உணவை உட்கொள்ள வேண்டுமென்று தோன்றும். அதுவும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த ஒரு பொருள் தான் மிளகு.

இந்த மிளகு கொண்டு ஒரு குழம்பு தயாரித்து உட்கொள்ளும் போது, மிளகின் காரத்தால் நெஞ்சில் தேங்கியுள்ள சளி முறிந்து வெளியேற்றி, சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக மிளகு குழம்பை செய்தால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். மிளகு குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து, அப்பளத்துடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மிளகு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: வறுத்து அரைப்பதற்கு

பொருள்அளவு
நல்லெண்ணெய்1 டேபிள் ஸ்பூன்
மிளகு1 டேபிள் ஸ்பூன்
மல்லி1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
வெந்தயம்10
வரமிளகாய்2
சீரகம்1 டீஸ்பூன்
கறிவேப்பிலை1 கொத்து

தாளிப்பதற்கு

பொருள்அளவு
நல்லெண்ணெய்3 டேபிள் ஸ்பூன்
கடுகு1/2 டீஸ்பூன்
வெந்தயம்10
மிளகு10
உளுத்தம் பருப்பு1/4 டீஸ்பூன்
வரமிளகாய்2
பூண்டு5 பல்
சின்ன வெங்காயம்6-7 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை1 கொத்து
பெருங்காயத் தூள்1 சிட்டிகை
மஞ்சள் தூள்1/4 டீஸ்பூன்
புளி1 எலுமிச்சை அளவு (நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
தண்ணீர்தேவையான அளவு
உப்புசுவைக்கேற்ப

செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மிளகு, மல்லி, துவரம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
  • பின்பு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், மிளகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு பற்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
  • அதன் பின் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, சுவை பார்த்து, குழம்பு மிகவும் புளிப்பாக இருந்தால், சிறிது வெல்லத்தை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான மிளகு குழம்பு தயார்.