காரக்குழம்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் செட்டிநாடு சுவையில் காரக்குழம்பு வைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. செட்டிநாடு ஸ்டைலில் எந்த உணவு செய்தாலும் வழக்கமாக சாப்பிடும் அளவை விட அன்றைக்கு அதிகமாகவே சாப்பிடுவோம். எனவே வீடே மணக்கும் அளவிற்கு செட்டிநாடு காரக்குழம்பு வைப்பது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
காரக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள் (Ingredient) | அளவு (Quantity) |
நல்லெண்ணெய் (Sesame Oil) | 3 ஸ்பூன் |
கடுகு (Mustard Seeds) | 1 ஸ்பூன் |
பெருங்காயத்தூள் (Asafoetida) | 1/2 டீஸ்பூன் |
கறிவேப்பிலை (Curry Leaves) | 1 கொத்து |
வெங்காயம் (Onion) | 1 (சிறிய வெங்காயம் 8) |
தக்காளி (Tomato) | 1 |
கத்தரிக்காய் (Brinjal) | 2 |
முருங்கைக்காய் (Drumstick) | 1 |
மஞ்சள் தூள் (Turmeric Powder) | 1/2 ஸ்பூன் |
புளி (Tamarind) | எலுமிச்சை பழம் அளவு |
வெல்லம் (Jaggery) | 1 சிறிய துண்டு |
உப்பு (Salt) | தேவையான அளவு |
மிளகு தூள் (Black Pepper Powder) | 1/2 ஸ்பூன் |
கொத்தமல்லி இலை (Coriander Leaves) | சிறிதளவு |
மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
தேவையான பொருட்கள் (Ingredient) | அளவு (Quantity) |
மல்லி (Coriander Seeds) | 3 ஸ்பூன் |
உளுந்து (Urad Dal) | 1/2 ஸ்பூன் |
வெந்தயம் (Fenugreek) | 1/2 ஸ்பூன் |
கடலை பருப்பு (Chana Dal) | 1 ஸ்பூன் |
துவரம் பருப்பு (Toor Dal) | 1 ஸ்பூன் |
காய்ந்த மிளகாய் (Red Chilies) | 7 |
கசகசா (Poppy Seeds) | 1 டீஸ்பூன் |
பூண்டு (Garlic) | 8 பற்கள் |
துண்டு (Red Chili) | 1 (சிறிய துண்டு) |
தேங்காய் (Coconut) | 1/4 கப் |
செட்டிநாடு காரக்குழம்பு செய்யும் முறை:
ஸ்டேப் -1: முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளவும். கடாய் சூடானதும் அதில் மசாலா அரைக்க மேலே கூறியுள்ள பொருட்கள் மற்றும் தேங்காய் இவை அனைத்தையும் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2: பிறகு, மசாலா பொருட்கள் அனைத்தும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனை 5 நிமிடங்கள் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3: இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் 2 ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள்.
ஸ்டேப் -4: கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5: அடுத்து, பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பிறகு இதனுடன் நறுக்கிய முருங்கைக்காய், கத்தரிக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு முறை வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6: இப்போது, அடுப்பின் தீயை குறைவாக வைத்து முருங்கைக்காய், கத்தரிக்காய் இவை இரண்டும் எண்ணெய்யில் நன்றாக வதங்கும் வரை 5 நிமிடம் மூடி வைக்கவும்.
ஸ்டேப் -7: 5 நிமிடம் கழித்த பிறகு இதில் அரைத்து வைத்த மசாலா பேஸ்டினை சேர்த்து கிளறி விடுங்கள். அடுத்து, இதில் எலுமிச்சை அளவில் ஊறவைத்து கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
ஸ்டேப் -8: இப்போது, இதனுடன் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். பிறகு 5 நிமிடம் கழித்து இதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு மிளகு தூள் ,கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சூப்பரான செட்டிநாடு காரக்குழம்பு தயார்.!