policemen on security duty
policemen on security duty

நாளை வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் போலீசார்

5/5 (15votes)

தமிழகம், புதுச்சேரியில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1.90 லட்சம் போலீசார் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் தோ்தலை அமைதியாக நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாளை நடக்க போகும் பொதுத்தேர்தலில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் உட்பட 102 தொகுதிகளிலும் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.

ஓய்ந்தது பிரச்சாரம்

39 தொகுதிகளிலும், திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல, தனித்தே களமிறங்கியிருக்கிறது. ஆக மொத்தம் 4 முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது. கடந்த 17 நாட்களாக தமிழகத்தில் நடந்துவந்த பிரச்சாரங்கள், நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.. இதையடுத்து, மாலை 6 மணியிலிருந்தே அனைத்து வகையான பிரச்சாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பயிற்சி மையங்கள்

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு, சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களுக்கு, வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள தலைமை அலுவலர் மற்றும் இதர அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட உள்ளனர். பிறகு, மின்னணு வாக்குப்பதிவு மிஷின்கள், விவிபாட் மிஷின்கள் போன்றவை அனைத்துமே, வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி, மாலை 6 மணி வரை நடைபெறும்… 17 ஆயிரம் வீரர்களை, தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும்நிலையில், 1.20 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட போகிறார்கள்.. இவர்களை தவிர, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து10 ஆயிரம் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் என கிட்டத்தட்ட 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

நவீன ரக துப்பாக்கி

பதற்றமான 8,050 வாக்குச்சாவடிகளில் நவீன ரக துப்பாக்கிகளுடன் துணை ராணுவப் படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மாநிலம் முழுவதும் 6,000 பகுதிகள் பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்குப்பதிவின்போது, ஏதாவது ஒரு பகுதியில் பிரச்சனை ஏற்பட்டால், உடனே அங்கு சென்று, சட்டம் -ஒழுங்கு பாதிப்பு இல்லாத வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள். அதேபோல, அதிக பண புழக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சென்னை

சென்னையை பொறுத்தவரை, வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகள், ஸ்ரீபெரும்புதூா், திருவள்ளூா் உள்ளிட்ட தொகுதிகளில் சுமாா் 30 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். சென்னையில் 708 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரா்களும், தமிழக சிறப்புக்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறாா்கள். மொத்தத்தில், மாநிலம் முழுவதுமுள்ள தோ்தல் பாதுகாப்பு பணிகள் அனைத்தும், பெருநகர காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தலைமையில் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட காவலா்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ஆயுதப்படை மைதானங்களில் ஆஜராகி, தாங்கள் எங்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என்ற கடிதத்தை அதிகாரிகளிடம் இருந்து பெற்று சென்றுள்ளனர்.