திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட திருவாரூர்- காரைக்குடி இடையே மூன்று புதிய ரயில்களை இயக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்துள்ளது . இந்த புதிய ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட திருவாரூர்- காரைக்குடி இடையேயான 149.5 கிலோ மீட்டர் வழித்தடம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அகலரயில் பாதையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் காரைக்குடி, திருவாரூர் வழித்தடத்தில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி, ராமேசுவரம் – செகந்திராபாத், தாம்பரம் – செங்கோட்டை ஆகிய மூன்று வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் இந்த வழித்தடத்தில் 75 முதல் 90 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் காரைக்குடி, திருவாரூர் வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்கான தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபரில் திருவாரூர் காரைக்குடி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது ரயில்கள் 121 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரயில்களின் வேகமும் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காரைக்குடி திருவாரூர் வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு இருமார்க்கத்திலும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
இதேபோல் காலை 8.20 மணிக்கு திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு செல்லும் ரயிலுக்கு இணையாக காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு காலை 9 மணிக்கு வருவது போல் ஒரு ரயில் இயக்க வேண்டும். இது மன்னார்குடி-மயிலாடுதுறை செல்லும் ரயிலுக்கு இணைப்பாக அமையும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.
இதேபோல் திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு மாலை 4.45 மணிக்கு கடைசி ரயிலாக உள்ள நிலையில், யணிகளின் வசதிக்காக இரவு 7 மணிக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். மேலும் விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில்களை திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து, திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு ரயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
மேலும் செகந்திராபாத்-ராமநாதபுரம் மற்றும் எர்ணாகுளம்-திருவாரூர்-வேளாங்கண்ணி வாராந்திர ரயில்களை நிரந்தரமாக்கி வாரம் இருமுறை இயக்கிட வேண்டும். திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயிலை நிரந்தர சேவையாக மாற்றிட வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது. இத்தனை கோரிக்கைகள் ரயில்வே வாரியத்திடம் வைக்கப்பட்ட நிலையில், மூன்று புதிய ரயில்களை இயக்க டெல்லியில் உள்ள ரயில்வே போர்டு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, காரைக்குடி மயிலாடுதுறை இடையே தினசரி விரைவு ரயில், திருவாரூர்-காரைக்குடி இடையே பயணிகள் ரயில், செகந்திரபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர ரயிலை இயக்க ரயில்வே போர்டு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ரயில்கள் இயக்கம் தொடங்கும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.