நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 26-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்திய குடிமக்களுக்கு நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் அடிப்படையில் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக வழங்க அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினத்தை தான் நாம் நவம்பர் 26-ம் தேதி கொண்டாடுகிறோம். அந்த வகையில் இந்த வருடம் 75வது இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு தினத்தில் பள்ளி, கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மறும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள்/ கருத்தரங்குகள்/ வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சம்விதன் திவாஸ் அல்லது Constitution Day Of India என அழைக்கின்றனர். 1949-ம் ஆண்டு நம் நாடு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதனால் இந்த ஆண்டு (2024) நாம் 75-வது அரசியலமைப்பு தினத்தை சிறப்பிக்கிறோம்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளும்போது உருவாக்கப்பட்டிருந்த இந்திய அரசு சட்டம், 1935 அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு சட்டகமாக இருந்தது. ஆனால் இந்தியாவை இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக நிர்வகிக்க அது போதுமானதாக இல்லை.
இந்திய மக்கள் அனைவரும் அரசியலமைப்பு என்ற குடையின் கீழ்தான் ஒருமைப்பட்டுள்ளோம். ஜனநாயகத்தின் அடித்தளமாக திகழும் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு மாதங்கள் கழித்து ஜனவரி 26-ம் தேதி (குடியரசுதினம் அன்று) அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியா இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு நாடாக உருவானது.
அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக 2015-ம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மதிப்புகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
அரசியலமைப்பின் சிற்பி என்று போற்றப்படும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவரான டாக்டர் அம்பேத்கரின் நினைவுகளை வணங்கவும் இந்த நாள் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
அரசியலமைப்பின் உருவாக்கமும் முக்கியத்துவமும்
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கான நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஓர் அடித்தளம் தேவைப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளும்போது உருவாக்கப்பட்டிருந்த இந்திய அரசு சட்டம், 1935 அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு சட்டகமாக இருந்தது. ஆனால் இதியாவை இறையாண்மை கொண்ட குடியரசு நாடாக நிர்வகிக்க அது போதுமானதாக இல்லை.
1946 டிசம்பரில் கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. இதில் அம்பேத்கர், நேரு, வல்லபாய் படேல் ஆகிய முக்கிய தலைவர்களுடன் 389 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 299 ஆகக் குறைக்கப்பட்டது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமைத்தாங்க டிசம்பர் 9, 1946ல் இந்த அவையின் முதல் கூட்டம் நடைபெற்றது.டாக்டர் அம்பேத்கர் தலைமையில் வரைவு கமிட்டி அமைக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. 11 அமர்வுகளில் அரசியலமைப்புச் சட்டம் விவாதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாள்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணிகள் நீண்டன.
நவம்பர் 26, 1949 அன்று, அரசியலமைப்பு சபை அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. முதலில் 395 ஆர்டிகள்கள் 8 அட்டவணைகளுடன் (பின்னர் திருத்தப்பட்டது) உலகிலேயே நீண்ட அரசியலமைப்புச் சட்டமாக உருவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
இது முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் அவர்களின் கடமைகளை வலியுறுத்தும் சாசனமாக உள்ளது. அரசியலமைப்பு குறித்த சான்றோரின் உரைகளை தெரிந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இந்த நாளை சிறப்பிக்கலாம்.