தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் இன்று பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்றும் மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் விட்டு விட்டு மழையை எதிர்பார்க்கலாம் என்றும் டெல்டா வெதர்மேன் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல் ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை குறித்து டெல்டா வெதர்மேன், மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, தென்மேற்கு வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவுகிறது. டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக மழை துவங்கியுள்ளது.
குறிப்பாக நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பூம்பூகார் சுற்றுவட்டாரங்களில் தற்போது கனமழை பதிவாகி வருகிறது. இன்று (26/11/2024) பிற்பகல் வரை டெல்டாவில் விட்டு விட்டு தான் மழை பதிவாகும். மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும். முன்னதாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நேற்றிரவு மூன்றாம் சுற்று மழை துவங்கியது.
இன்றும் சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு மழை எதிர்ப்பார்க்கலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
Comments are closed