November 29, 2024 Thiruvarur: புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று காலை வானிலை மையம், “தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. அதன் வேகம் 10 கி.மீ இருந்து 9 கி.மீ ஆக குறைந்துள்ளது” என்று அறிவித்திருந்தது. மேலும், இது புயலாக மாறாது என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, ‘தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்று அழுத்த தாழ்வு மையம் வலுவிழக்காமல், புயலாகவே நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளில் கரையை கடக்கும்’ என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் தாழ்வு மண்டலம் அடுத்து மூன்று மணிநேரத்தில் புயலாக மாறும் என்றும், அதன் பின்னர், வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரிக்கு மத்தியில் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நாளை மதியம் புயல் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் புயலின் காற்று மணிக்கு 70 – 80 கி.மீ வேகத்தில் இருந்து 90 கி.மீ வேகம் வரை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய தகவலின் படி, இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர் மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Comments are closed