Tamil Nadu Puducherry Schools Holiday
Tamil Nadu Puducherry Schools Holiday

பள்ளிகள் கல்லூரிகள் நாளை (டிசம்பர் 3) விடுமுறை சற்றுமுன் வெளியான அறிவிப்பு

5/5 (113votes)

கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 3) பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு, புதுச்சேரியில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. புதுச்சேரி பகுதியில் கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியிலும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணி பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

ஃபெஞ்சல் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை டிசம்பர் 3ஆம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல கல்வி நிறுவனங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எனவே நாளைய தினமும் (டிசம்பர் 3) கடலூர் மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுவை பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடுவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.