தமிழகத்தில் நேற்றைய தினம் 18 இடங்களில் வெயில் சதமடித்தது. அதில் ஈரோடுதான் டாப்பில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான இடங்களில் வெயில் வதைத்து வருகிறது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுதான் தொடங்கியது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பதிவான வெப்பநிலை பகீர் கிளப்பும் விதமாகவே அமைந்தது.
நாள்தோறும் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஊட்டி, கொடைக்கானல்களிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்கிறார்கள்.
வசதி இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்கிறார்கள். இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 18 இடங்களில் வெப்பநிலை சதமடித்துள்ளது. ஈரோட்டில் 110 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர், திருத்தணி, வேலூரில் தலா 108.5 டிகிரியும், திருப்பத்தூரில் 107.6 டிகிரியும், மதுரை நகரத்தில் 106 டிகிரியும், திருச்சி, சேலத்தில் தலா 105 டிகிரியும், பாளையங்கோட்டை, மதுரை விமான நிலையத்தில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
03.05.2024 (நேற்று) முதல் 07.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
03.05.2024 (நேற்று) முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
04.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்
03.05.2024 (நேற்று) முதல் 07.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°-44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°-40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.