Singer Janaki Amma's
Singer Janaki Amma's

தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் குரலில் எப்போதும் மழலையும் இளமையும் உண்டு

5/5 - (5 votes)

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி. இதுவரை 48,000 பாடல்கள்வரை பாடியிருக்கும் ஜானகி அம்மாவுக்கு பல தலைமுறை ரசிக படையாக இருந்துவருகிறது. அவர் தனது குரலில் காட்டும் பாவங்களை மற்ற பாடகர்கள் அவ்வளவு எளிதாக காட்டிவிட முடியாது என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில் அவர் தனது 86ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள்வரை தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் குண்டூரை பூர்வீகமாகக் கொண்டவர் எஸ்.ஜானகி. இவரது தந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகிக்கு 20 வயது இருக்கும்போது அவரது குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது. ஜானகிக்கு சிறு வயது முதலே பாடுவதில் அலாதி ஆர்வம். இதன் காரணமாக முறைப்படி சங்கீதமும் கற்றுக்கொண்டார். சென்னைக்கு வந்தவர் ஏவிஎம் ஸ்டூடியோஸில் இசையமைப்பாளர் சுதர்சனத்திடம் பணிபுரிந்தார். ஜானகியின் திறமை அவருக்கு தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.

விதியின் விளையாட்டு

அதன்படி தன்னுடைய 19ஆவது வயதில் விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலில் தன்னுடைய திறமையை ஆணித்தரமாக நிரூபித்த ஜானகிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. முக்கியமாக தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் ஜானகிக்கு பாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் பல மொழிகளில் பாடும் பாடகியாக மாறினார்.

அன்னக்கிளி உன்னை தேடுதே

தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடிக்கொண்டிருந்த ஜானகி இளையராஜாவின் இசையில். அன்னக்கிளி படத்தில், ‘அன்னக்கிளி உன்னை தேடுதே’ என்று அவர் பாடியதை கேட்ட ரசிகர்கள் இன்றுவரை அந்த அன்னக்கிளியை மறக்காமல் தங்கள் காதுகளின் கூடுகளுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாடல்தான் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் என்பது நினைவுகூரத்தக்கது. இளையராஜாவுக்கு ஜானகி பாடிய முதல் பாடலே பட்டித்தொட்டியெங்கும் இன்பத்தேனை பாய்ச்சியது.

ராஜாவுடன் செய்த மேஜிக்

அந்த முதல் பாடல் மெகா ஹிட்டானதை அடுத்து ராஜாவின் கோட்டையில் அசைக்க முடியாத ராணியாக வலம் வந்தார் எஸ்.ஜானகி. 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப் பூவே பாடலை இப்போது கேட்டாலும், காதுகளுக்குள்ளும், மனதுக்குள்ளும் ஜில்லென்ற காற்றேதான் போகும். அதேபோல் இளையராஜா இசையில் அவர் பாடிய ஏராளமான பாடல்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக இருப்பவை. குறிப்பாக ஜானி படத்தில் இடம்பெற்ற காற்றில் எந்தன் கீதம் பாடல் எப்போதும் இசை ரசிகர்களுக்கு மெலோடி கீதம்தான். அதேபோல் பகல் நிலவு படத்தில் இடம்பெற்ற, பூமாலையே தோள் சேரவா பாடலில் ஜானகி செய்திருக்கும் விஷயம் அசாத்தியமானவை. அந்தப் பாடல் பல ஏற்ற இறக்கங்களோடு பயணிக்கக்கூடியது. அதற்கேற்றபடி தனது குரலையும் பயணிக்கவிட்டு பாடல் கேட்பவர்களை விண்வெளியில் மிதக்க வைத்திருப்பார் ஜானகி. இளையராஜாவும் ஜானகியும் சேர்ந்து செய்த உச்சக்கட்ட மேஜிக்கில் ஒன்றுதான் குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன். அந்தப் பாடல் திரையிசை பாடலுக்கே புது இலக்கணம் எழுதியது. குறிப்பாக ஜானகி. அதில், உண்டான காயம் எங்கும் தன்னாலே ஆறி போகும்’என்று ஜானகி சரணத்தை தொடங்கும் இடத்தை கேட்கையில் பலரும் அவரது குரலுக்கு சரணாகதி அடைந்துவிடுவர். இப்படி இளையராஜாவுடன் சேர்ந்து பல மேஜிக்கை செய்திருக்கிறார் ஜானகி.

ஏ.ஆர்.ரஹ்மானுடன்

இளையராஜாவுடன் சேர்ந்து எப்படி பல மேஜிக்குகளை செய்தாரோ அதேபோல்தான் ஏ.ஆர்.ரஹ்மானுடனும். அந்த மேஜிக்குகளில் உச்சம் என்றால் உயிரே படத்தில் இடம்பெற்ற நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல். அந்தப் பாடல் முழுக்க முழுக்க காமப்பால் வகையை சேர்ந்தது. அந்த காமப்பாலுக்கு ஜானகி தனது குரலால் காதல் பாலையும் கொடுத்திருப்பார். குறிப்பாக இரண்டாவது சரணத்தில் எல்லாம் ஜானகி பாடியதை கேட்டால் காதலும், காமமும் காதுகளில் பின்னிக்கொண்டு திரியும் என்பதுதான் உண்மை. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமின்றி தற்போதைய ட்ரெண்டிங்கான அனிருத் வரை பணியாற்றியிருக்கும் ஜானகி இதுவரை 48,000 பாடல்கள்வரை பாடியிருக்கிறார்.

ஏகப்பட்ட விருதுகள்

ஏகப்பட்ட மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.ஜானகி இதுவரை 4 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். பல்வேறு மாநில விருதுகளை 33 முறை வாங்கியிருக்கிறார். அதேசமயம் தன்னை தேடிவந்த பத்ம பூஷன் விருதை வேண்டாம் என்றும் ஒதுக்கிவிட்டார். அதற்கு காரணமாக, ‘காலம் தாழ்ந்த விருது தனக்கு தேவையில்லை’ என்று ஓபன் ஸ்டேட்மெண்ட்டும் விட்டார் ஜானகி. திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி இதுவரை 5,000 கச்சேரிகளுக்கும் மேல் உலகம் முழுவதும் செய்திருக்கிறார்.

தென்னிந்திய நைட்டிங்கேல்

சிலரது குரலில் மட்டும்தான் எப்போதும் இளமையும், மழலையும் இருந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட குரல் கிடைப்பது அபூர்வம். அது ஜானகிக்கு கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவருக்கு பல தலைமுறையினர் ரசிகர்களாக இருக்கிறார்கள். தென்னிந்திய நைட்டிங்கேல் என்றும் அழைக்கிறார்கள். எப்போதும் இளமையும், மழலையும் உடைய ஜான்கி அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..