லோக்சபா தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் உள்ளிட்ட இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைந்தன. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்த அளவில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவபாட் உள்ளிட்டவை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வாக்குப்பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள் தொகுதி வரியாக ஒதுக்கப்பட்டு வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. பின்னர் சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதற்கு அடுத்த படியாக உள்ள அதிகாரிகளுக்கு அவற்றை ஒதுக்கீடு செய்து பிரிக்கும் பணி கடந்த 15ம் தேதி நடைபெற்றது. சென்னையில் 16 இடங்களில் உள்ள பயிற்சி மையத்தில் இந்த பணிகள் நடைபெற்றன. தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, வாக்குப்பதிவு செய்யும் இடம் என உள்ளே வெளியே போன்ற இடங்களை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகு வர்த்திகள், சணல் கயிறு, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பயன்படுத்தும் உறைகள், கையில் வைக்கப்படும் மை உள்பட 21 பொருட்களை பிரித்து வைக்கும் பணியும் ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கிறது.
சென்னையில் இந்த பணியை மாநகராட்சி ஆணையரான மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். இந்த பொருட்களுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை மாவட்டத்தில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்குத் தேவையான 11,843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,842 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவிகள் (VVPAT) உள்ளிட்ட இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 3,726 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய 299 செக்டார் மெஜிஸ்ரேட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் காவல்துறை கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான பொருட்களைப் பிரித்தெடுத்து வழங்குவர். ஒரு செக்டார் மெஜிஸ்ரேட்டுக்கு 8 முதல் 12 வாக்குச்சாவடி மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 19,419 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
வாக்காளர்களை பொறுத்தளவில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்களும், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்களும், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 வாக்காளர்களும் உள்ளனர். இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 6 லட்சத்து 67 ஆயிரத்து 606 வாக்காளர்கள் உள்ளனர்.