Rain in Thiruvarur
Rain in Thiruvarur

அடுத்த 2 மணி நேரம் கோவை முதல் குமரி வரை கொட்டப்போகும் மழை

5/5 (16votes)

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, மதுரை, குமரி, தென்காசி உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கொளுத்தி எடுத்த வெயிலுக்கு சற்று பிரேக் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். 18 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது 7 மாவட்டங்களில் மட்டுமே 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கோவை, நீலகிரி, தென்காசி, குமரி,நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தகித்து வந்த வெப்பநிலை பகுதியாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல் இரவு 10 மணி வரை கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மழை பெய்யும் நேரத்தில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், நாளை மறுநாள், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 17 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 18 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 19 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 20 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று தெரிவித்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று தெரிவித்துள்ளது.