திருப்பதி ஏழுமலையானை மே மாதம் தரிசனம் செய்யப்போறீங்களா முழு விபரம்

5/5 - (2 votes)

திருமலை: திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதத்தில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. அதற்கான அறிவிப்புகளை தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். சராசரியாக நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மாதம்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்து வருகிறது.

நாள்தோறும் இலவச தரிசனம், இலவச டைம் ஸ்லாட்டட், விஐபி பிரேக் தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், சுபதம் தரிசனம் என பல்வேறு தரிசனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தும் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் மே மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. எலக்ட்ரானிக் எந்திரம் மூலம் குலுக்கல் முறையில் வழங்கப்படும் மின்னணு டிப் டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இன்றைய தினம் மதியம் 12 மணிக்கு லக்கி டிப் மூலம் டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெறும் பக்தர்கள் பணத்தை செலுத்தி முன்பதிவை உறுதி செய்ய வேண்டும். மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கரண சேவைக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மெய்நிகர் சேவைகளின் மே ஒதுக்கீட்டையும் அவற்றின் இடங்களும் நாளைய தினம் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட உள்ளது. மேலும், ஸ்ரீவாணி அறக்கட்டளை மே மாதத்திற்கான டிக்கெட்டுகளை நாளை மறுநாள் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடவுள்ளது. மேலும், அங்க பிரதட்சணம் டோக்கன்களையும் திருப்பதி தேவஸ்தானம் இம்மாதம் 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது.

இதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் நாளை மறுநாள் 23ஆம் தேதி மதியம் 3 மணிக்கு தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு இலவசமாக முன்பதிவு செய்துகொள்ளலாம். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதே நாள் மதியம் 3 மணிக்கு திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது.

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...