Thiruvarur March 21, 2024: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவில் 5 வேலி பரப்பளவைக் கொண்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என போற்றப்படும் பெருமை வாய்ந்த இந்தத் தேரின் உயரம் 96 அடியும் 350 டன் எடை ஆகும்.
திருவாரூர் தேரை வடம்பிடித்து இழத்த பக்தர்கள்#Thiruvarur #Theru #Ther #Chariot #Festival pic.twitter.com/K8SZhjoRop
— Thiruvarur News (@ThiruvarurNews) March 21, 2024
வருடா வருடம் பங்குனி உத்திரத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழித்தேரோட்டத்திற்காக பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தேரின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, வேளாகுறிச்சி ஆதினம் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட இந்த தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
இந்த திருவிழாவை காண்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் பொழுது ஆரூரா தியாகேசா என முழக்கமிடும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
இந்த தேரோட்டத் திருவிழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேருக்கு பின்புறம் மருத்துவ குழுவினர் அடங்கிய அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.