விராட் கோலி: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
12000 ரன்களை எட்டிய முதல் வீரர்:
முதல் போட்டியில் விராட் கோலி 6 ரன்களை தொட்டபோது இந்த மைல்கல்லை எட்டினார். ஒட்டுமொத்தமாக 12,000 ரன்களை கடந்த ஆறாவது வீரர் மற்றும் T20 கிரிக்கெட்டில் 12000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் விராட் கோலி ஆவார். விராட் கோலி தனது 360-வது டி20 போட்டியில் இந்த சாதனையை எட்டினார்.
343 போட்டியில் 12000 ரன்கள் எட்டி சாதனை படைத்த கிறிஸ் கெயிலுக்கு பின்னர் 12000 ரன்களை மிக வேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இந்திய வீரர்களில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டியில் 11,156 ரன்களுடன் கோலிக்கு அடுத்தபடியாக உள்ளார்.
1,000 ரன்களைக்கடந்த விராட் :
இதற்கிடையில் இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். அவர் தனது 15வது ரன் மூலம் இந்த சாதனையை படைத்தார். இன்றைய போட்டியில் கோலி சிஎஸ்கேக்கு எதிராக 21 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை சிஎஸ்கே அணிக்கு எதிராக விராட் 1,006 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20யில் அதிக ரன்கள்:
கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் | ரன்கள் |
---|---|
கிறிஸ் கெய்ல் | 14562 |
சோயப் மாலிக் | 13360 |
கீரன் பொல்லார்ட் | 12900 |
அலெக்ஸ் ஹேல்ஸ் | 12319 |
டேவிட் வார்னர் | 12065 |
விராட் கோலி | 12000 |