ஐபிஎல் 2024 தொடக்கப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னையில் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி வெள்ளியன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் போட்டி அட்டவணை முதற்கட்டமாக மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மொத்தம் 21 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 74 போட்டிகளைக் கொண்டதாக நடத்தப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.
74 லீக் போட்டிகளின் அடிப்படையில் முதல் 2 அணிகள் குவாலிஃபையர் 1 எனப்படும் தகுதி போட்டிக்கு முன்னேறும். இவ்விரு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும். இதேபோன்று லீக் போட்டிகளின் பாயின்ட்ஸ் டேபிளில் 3 மற்றும் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். இதில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறி விடும். வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் குவாலிஃபையர் 2 என்ற சுற்றில் விளையாடும். இந்த குவாலிஃபைர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும். இவ்வாறாக போட்டி அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஐபிஎல் போட்டிகளுக்கான 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட அட்டவணை அடிப்படையில் போட்டிகள் சென்னை, மொகாலி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, லக்னோ, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறவுள்ளது.
வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தொடக்க போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி தொடங்கும் என சென்னை அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.