Thiruvarur Thiyagarajar Bhaktakakshi
Thiruvarur Thiyagarajar Bhaktakakshi

திருவாரூர் தியாகராஜர் பக்தகாட்சி விழா

5/5 (2)

தேவலோகத்தை வேண்டாம் என்று கூறி திருவாரூரை ஆள வந்த தியாகேசரை, குபேரன் தனது நாடான குபேரபுரியை ஆளவருமாறு பணிந்தான். குபேரபுரி செல்ல மனமில்லாமல் திருவாரூரிலேயே இருக்க சித்தமானார் தியாகேசர்.
குபேரன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, நான் குபேரபுரியை ஆள வர வேண்டுமெனில் என்னுடைய நடனத்தின் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் அளிக்கவேண்டும் என தியாகேசர் குபேரனிடம் கேட்க அவ்வாறே அளிப்பதாக குபேரன் ஒப்புக்கொண்டான்.

முதலாம் பிரகாரத்தில் தியாகேசர் திருநடனம் புரிந்தபோது, ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் என குபேரன் தான் அணிந்திருந்த மொத்த நகைகளையும் அளிக்க நேரிட்டு பின் தன் மனைவி அணிந்திருந்த நகைகளையும் அளித்தான் . இரண்டாம் பிரகாரத்திற்கு சென்ற போது தனது சேனைகள் அணிந்திருந்த அனைத்து பொன்களையும் பொருட்களையும் அளிக்க வேண்டியதாயிற்று .

மூன்றாம் பிரகாரத்திற்கு சென்று ஆரூர் பக்தர்களுக்கு நடனத்துடன் காட்சி அளித்துவிட்டு குபேரபுரி செல்லலாம் என தியாகேசர் குபேரனிடம் கூற குபேரனும் அவ்வாறே ஆகட்டும் என கூறினான். ஆனால் தியாகேசர் நீண்ட நெடியதும், காணக்கிடைக்காததும், கண்கொள்ளாததும், மெய்சிலிர்க்க வைப்பதும், அதிர்வலைகளை ஏற்படுத்துவதும், நொடிக்கு ஓராயிரம் அடிகளுடன் கூடியதுமாகிய தனது நடனத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்க, தியாகேசனின் அடுத்த அடிக்கு கொடுப்பதர்க்கு பொன், பொருள் ஏதும் இல்லாமல் குபேரபுரியின் செல்வக் கிடங்கு காலியாகி குபேரன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

உடனே தியாகேசன் தோல்வியுற்ற குபேரனிடம் இருந்து பெற்ற பொன், பொருள் என அனைத்தையும் பல மடங்காக்கி குபேரனிடம் திரும்ப அளித்து , குபேரபுரி சென்று நல்லாட்சி புரிந்திடுக என ஆசி வழங்கி அனுப்பினார். பின் ஆரூரில் இருப்பதே இன்பம் என கூறி யதாஸ்தானம் சென்றார்.

இச்சம்பவத்தினை அனைவரும் அறிய வேண்டும் வகையில் ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து தியாகேசன் யதாஸ்தானம் செல்லும் முன் பக்தகாட்சி உற்சவம் நடைபெறுகிறது. இந்த பக்தகாட்சி உற்சவத்தை திருவாரூர், விஜயபுரம் வர்த்தகர்கள், பக்தர்கள் என அனைவரும் ஒன்று கூடி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குபேரர்களாக இருந்து திருநடனத்துடன் காட்சி கொடுக்கும் தியாகேசனுக்கு பக்தியுடன் மலர்தூவி அளிக்கின்ற புஷ்பத்தில் பொன், வெள்ளி சேர்த்து அளிக்கிறார்கள் அவ்வாறு அளிக்கப்படும் பொன்னையும், பொருளையும் தியாகேசன் பலமடங்காக்கி பக்தர்களுக்கே திரும்ப அளித்து அருள் பாலிப்பான் என்பது ஐதீகம்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர்கள் உபயமாக நடைபெறும் பக்தகாட்சி பெருவிழா 26.03.2024 செவ்வாய்க்கிழமை நாளை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு நடைபெறும் மகா அபிஷேகத்திலும், இரவு 9 மணிக்கு அ/மி தியாகராஜ சுவாமி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து யதாஸ்தானம் செல்லும் பெருவிழாவிலும் அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற அழைக்கின்றோம்.

ஆரூராதியாகேசா