lungs-cancer-signs
lungs-cancer-signs

ஆண்களில் நுரையீரல் புற்றுநோயின் முதல் 4 ஆரம்ப அறிகுறிகள்

5/5 (6)

உலகளவில் மிகவும் கொடிய மற்றும் உயிரைப் பறிக்கும் நோய்களுள் ஒன்று தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் பொதுவான புற்றுநோய் தான் நுரையீரல் புற்றுநோய். அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஜர்னல்ஸின் கூற்றுப்படி, உலக மக்கள்தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான புதிய வழக்குகளுடன் 18 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த கொடிய புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் தீங்கு விளைவிக்கும் செல்கள் வளரும் போது ஏற்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரல் புற்றுநோயானது புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. அதேப் போல் உலகில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக புகைப்பிடிப்பதால், இந்த நுரையீரல் புற்றுநோய் பெண்களை விட ஆண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, பொதுவாக புற்றுநோயானது உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் பிரிக்கப்பட்டு, பிறழ்வுகளை ஏற்படுத்தி, உடல் செல்கள் சேதமடைந்து கட்டுப்பாடின்றி வெகுஜனங்களை உருவாக்கி அல்லது கட்டிகளை ஏற்படுத்தி, உறுப்புக்களின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். இதில் நுரையீரல் புற்றுநோயானது தொடக்கத்தில் சுவாசக்குழாய்கள் அல்லது காற்றுப் பைகளில் தொடங்கும். அதன் பின் நிணநீர் கணுக்கள் மற்றும் பிற உறுப்புக்களுக்கு மெதுவாக பரவத் தொடங்கும். இந்த நுரையீரல் புற்றுநோயும் பிற புற்றுநோய்களைப் போன்றே வளர்ந்து, அதன் வளர்ச்சிக்கு ஏற்ப அறிகுறிகளை வெளிக்காட்டும்.

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் எதுவும் தெரியாது. இருப்பினும், கட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒருசில அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

சளி பிடித்திருக்கும் போது அல்லது சுவாசப் பாதையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தால், அது இருமலை உண்டாக்கும். ஆனால் இந்த இருமல் ஒருவருக்கு பல வாரங்களாக நீடித்திருந்தால், அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் இப்படி நாள்பட்ட இருமலை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே கவனிக்க வேண்டும்.

எந்த மாதிரியான இருமலை சந்தித்தால் மருத்துவரை அணுக வேண்டும்?

  • அடிக்கடி இருமலை சந்தித்தால்
  • அடிவயிற்றில் இருந்து இருமல் வந்தால்
  • வித்தியாசமான சப்தத்துடன் இருமலை சந்தித்தால்
  • இரத்தம் கலந்த சளி வெளியேறினால்
  • இருமலின் போது அளவுக்கு அதிகமாக சளி வெளியேறினால்
  • இருமலின் போது இப்படியான அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

மூச்சுத்திணறல்

நுரையீரல் புற்றுநோயின் ஒரு அறிகுறி தான் மூச்சுத்திணறல். ஏனெனில் நுரையீரல் புற்றுநோய் காற்றுப்பாதையை தடுப்பதால் இப்படி ஏற்படலாம். மேலும் சுவாசிப்பதில் பெரிய மாற்றங்களைக் கண்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

உடல் வலி

நுரையீரல் புற்றுநோய் இருந்தால் மார்பு, தோள்பட்டை அல்லது முதுகு போன்ற பகுதிகளில் வலியை சந்திக்க நேரிடும். இந்த வலியானது நாள் முழுவதும் இருக்கலாம் அல்லது அடிக்கடி ஏற்படலாம். அதுவும் இந்த வலியானது கூர்மையாகவோ, மந்தமாகவோ அல்லது இடைவிடாததாகவோ இருக்கலாம். நுரையீரல் புற்றுநோயானது எலும்புகளுக்கு பரவியிருந்தால், அது இப்படியான வலியை உண்டாக்கக்கூடும்.

கரகரப்பான குரல்

உங்கள் குரலில் திடீரென்று ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதாவது உங்கள் குரல் நீண்ட காலமாக கரகரகப்பாகவே இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சோதித்துப் பாருங்கள். சளி, இருமலின் காரணமாகவும் இப்படி ஏற்படலாம். இருப்பினும் இந்த அறிகுறி தொடர்ந்து நீடித்திருந்தால், நுரையீரல் புற்றுநோய் இருக்க நிறைய வாய்ப்புள்ளது.

எடை இழப்பு

எடை இழப்பு பல நோய்களுக்கு அறிகுறியாக இருப்பதால், திடீரென்று உங்களின் உடல் எடை குறைவதோடு, மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளும் தெரிந்தால், அசால்ட்டாக இருக்காமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Comments are closed