Veena Dakshinamurthy
Veena Dakshinamurthy

யோகமும் ஞானமும் தரும் வீணா தட்சிணாமூர்த்தி

5/5 - (2 votes)

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில்,சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் விஷமங்களேஸ்வரர். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த திருத்தலம் இது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

ஆலயத்திற்குள் நுழையும் போதே இடது புறம் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அமர்ந்த நிலையில்,நான்கு கரங்களுடன்,பின் வலக்கரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் திருமால் காட்சி தருகிறார்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறையை நோக்கி இருபுறங்களில் சூரிய சந்திரர்கள் காட்சி தருவர்.இங்கு சூரியன் இருக்க வேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தேவியரோடு காட்சி தருவது அரிது என்கிறார்கள் பக்தர்கள்.

சூரிய பகவான் திருமால் அம்சமாக,சூரிய நாராயணர் என்று போற்றப்படுகிறார். கருவறையை வலம் வரும் போது தெற்கு கோஷ்டத்தில் வீணையை ஏந்தியபடி,நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

பின்னிரு கரங்களில் மான்,மழு ஏந்தி,முன்னிரு கரங்களில் வீணையை மீட்டி,அந்த நாதத்தில் மெய் மறந்த நிலையில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவர் திகசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்திலும் இதே போன்ற வீணா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

குருப் பெயர்ச்சியையொட்டி, இந்தத் தலத்துக்கு வந்து விஷமங்களேஸ்வரரையும் வீணா தட்சிணாமூர்த்தியையும் மனதாரப் பிரார்த்தனை செய்தால்,”குருவருளும் திருவருளும்” கிடைத்து யோகத்துடனும் ஞானத்துடனும் திகழலாம்.

கருவறையின் பின்புற கோஷ்டத்தில் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒன்றான உமா ஆலிங்கன மூர்த்தியையும் தரிசிக்கலாம்.

சிவபெருமான், வலது கையால் சின் முத்திரை காட்டியும் இடது கையால் பார்வதி தேவியை அணைத்தபடி அபூர்வமாக காட்சியளிக்கிறார்.இங்கே வந்து இந்த மூர்த்தியை வணங்கினால்,கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

ஈசன் தனது இடது பாதத்தின் சுண்டு விரலை தேவியின் வலது பாதத்தின் மீது வைத்திருப்பது போன்றுநுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது, இச்சிலை. இந்த உமா ஆலிங்கன மூர்த்தியை வழிபட மணப்பேறு,மகப்பேறு கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

தொடர்ந்து மேற்கே,தனிச் சந்நதியில் லட்சுமி நாராயணர்,கருவறையின் வட கோஷ்டத்தில் பிரம்மா,சரஸ்வதி,துர்க்கை சந்நதிகள் உள்ளன.அனைத்துச் சிற்பங்களும் கலைநயம் ததும்ப காட்சியளிக்கின்றன. ஆலயத்திற்கு வெளியே நாக தோஷங்களை நீக்கும் பாம்புப் புற்று காணப்படுகிறது.

ௐ நமசிவாய🙏

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Comments are closed