வருகின்ற ஜூன் 1 முதல் 29 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார். ஆனால், விராட் கோலி இடம் பெறுவது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், எதிர்வரும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக சர்வதேச டி-20 போட்டியில் பங்கேற்காமல் இருந்த ரோஹித் மற்றும் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி-20 தொடருக்கு அழைக்கப்பட்டனர். அந்த தொடரில் 3 போட்டிகளிலும் ரோஹித் விளையாடிய நிலையில், கோலி இரு போட்டிகளிலும் மட்டுமே களம்கண்டார். மேலும், அண்மையில் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளிலும் சொந்த காரணங்களுக்காக கோலி பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் முடிவு செய்துள்ளதாகவும், இதனால்,உலகக் கோப்பை அணியில் இருந்து விராட் கோலி கழற்றிவிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் அசத்தும் பட்சத்தில் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது என்பதால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இதேப்போன்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயத்தால் விலகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின்போது முகமது ஷமி காயமடைந்தார். அதன் பின் இந்திய அணி பங்கேற்ற பல தொடர்களை தவறவிட்ட ஷமி, விரைவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள இருபது ஓவர் உலகக் கோப்பைக்கு அவர் தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி வரும் இருபது ஓவர் உலகக் கோப்பையிலும் விளையாடமாட்டார் என வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களின் மனதில் இடியாக இறங்கியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார். நல்ல ஃபார்மில் இருந்து வந்த அவர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காதது இந்திய பந்துவீச்சு படைக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.