திருவாரூர் தியாகராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவில் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம். வரும் 21ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி கடந்த மாதம் பிப்ரவரி 25ஆம் தேதி நடந்தது. வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழி தேரோட்டம் பங்குனி ஆயில்ய நட்சத்திரமான மார்ச் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
தேரோட்ட விழாவையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய நான்கு தேர்களின் கூரைகள் பிரிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பிரம்மாண்ட அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன்.
இந்த பிரம்மாண்டமான ஆழித்தேரை கட்டமைக்க வனத்துறை சார்பில் நல்ல தரமான 2,500 மூங்கில்கள் வரவழைக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மூங்கில்கள் அனைத்தும் மருதூர் என்ற கிராமத்தில் இருந்து எடுத்து வரப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த மூங்கில்களை இணைக்கும் கட்டுக்களை கட்டுவதற்காக 250 கட்டு தேங்காய் நார் கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் திருச்சி பெல் நிறுவனம் மூலம் தேரின் நான்கு இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜ சாமி வீற்றிருக்க வரும் மார்ச் மாதம் 21ஆம் தேதி வியாழக்கிழமை சரியாக காலை 8 மணிக்கு ஆரூரா….! தியாகேசா….! என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடிக்கப்பட்டு நான்கு வீதிகளில் வீதி உலா வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்வர்.