காணாமல் போன தன் காதலியை (அம்மு அபிராமி) தேடிக்கொண்டிருக்கிறான் பள்ளி மாணவன் ஶ்ரீ (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்). மறுபுறம், அப்பெண்ணின் தந்தையும் ஶ்ரீயின் ஆசிரியருமான வசந்த் (ரகுமான்), காவல்நிலையம் சென்று ஆய்வாளர் செல்வத்திடம் (சரத்குமார்) புகாரளிக்கிறார். மறுபுறம், சினிமா இயக்குநராகும் கனவோடிருக்கும் வெற்றிக்கு (அதர்வா), அவரின் வாழ்க்கையையே தலைகீழாக்கும் அளவிற்குப் பெரிய பிரச்சனை வரவே.
அக்கவலையிலிருந்து தப்பிக்கப் போதையில் சுற்றிக்கொண்டிருக்கிறார். இந்த மனிதர்களும், அவர்களின் பிரச்னைகளும் ஓர் இரவில் சந்தித்துக்கொள்கின்றன. அப்போது வெளிப்படும் அவர்களின் உண்மை முகங்களும் நிறங்களும் என்ன என்பதைப் பேசுகிறது கார்த்திக் நரேனின் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம்.
பள்ளி மாணவனாக துஷ்யந்த், காதல், பதற்றம், கோபம் போன்ற எமோஷன்களை மிகையில்லாத மீட்டரில் யதார்த்தமாகக் கொண்டு வந்து கவனிக்க வைக்கிறார். போதையிலேயே சுழலும் இளைஞனாகவும் ஆக்ஷன் காட்சிகளில் மிடுக்காகவும் வந்து கவரும் அதர்வா, எமோஷனலான காட்சிகளை மேம்போக்காகவே கையாண்டிருக்கிறார்கள்.
பதற்றம், குற்றவுணர்வு என மாறி மாறிப் பயணிக்கும் ஆழமான கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரகுமான். கேஷ்வலான மேனரிஸத்தால் தனக்குக் கொடுக்கப்பட்ட சாதாரண கதாபாத்திரத்தை, அழுத்தமான கதாபாத்திரமாக மாற்ற முயன்றிருக்கிறார் சரத்குமார். அம்மு அபிராமி, ஜான் விஜய், சந்தானபாரதி ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் இரவிலும், இருட்டிலுமே நகரும் த்ரில்லர் படத்திற்கு, டிஜோ டாமியின் ஒளிப்பதிவில் ப்ரேம்களும், கலர் பேலன்ஸும் பலம்! போதையில் அதர்வா சுழலும் காட்சிகளில் தன் ட்ரிப்பியான கட்களால் கவனிக்க வைக்கும் படத்தொகுப்பாளர் ஶ்ரீஜித் சாரங், பரபரப்பாக நகரும் காட்சிகளில் ஏனோ விறுவிறுப்பைக் கூட்டத் தவறியிருக்கிறார். ஶ்ரீஜித் சாரங்கின் ‘டிஐ’ ஒரு த்ரில்லருக்கான மூடை கச்சிதமாக செட் செய்கிறது. தன் பின்னணி இசையால் பதற்றம், போதை, காதல், குற்றவுணர்வு என எல்லா உணர்வுகளையும் ஆழமாக்கியிருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய்.
வெவ்வேறு மனிதர்களையும் அவர்களின் மறுபக்கத்தையும் ஆழமாகவும் நிதானமாகவும் சொல்வதற்கு இயக்குநர் கார்த்திக் நரேன் த்ரில்லர் பாணி திரைக்கதையைக் கையிலெடுத்திருக்கிறார். சுவாரஸ்யமான முடிச்சுகளும், வெவ்வேறு கதைகள் குழப்பமில்லாமல் ஒன்றுடன் ஒன்று சந்தித்துக்கொள்ளும் பாணியும் ரசிக்க வைக்கின்றன. நல்ல முகம், தீய முகம், இரண்டும் கலந்த முகம் ஆகிய மூன்றையும் கொண்டு எழுதப்பட்ட பிரதான கதாபாத்திரங்கள் தொடக்கத்தில் சுவாரஸ்யம் தந்தாலும், ஒரு கட்டத்தில் அதே சுவாரஸ்யத்திற்காக அக்கதாபாத்திரங்கள் லாஜிக்கை மீறி நகரத் தொடங்கிவிடுகின்றன.
அதனால், எக்கச்சக்கமான கேள்விகள் எழுவதால், எமோஷனலாக அக்கதாபாத்திரங்களிடமிருந்து விலகத் தொடங்கிவிடுகிறோம். முக்கியமாக, கார், பெரிய வீடு என வாழும் அதர்வா கதாபாத்திரம், “நம்மள மாதிரி மிடில் க்ளாஸுக்கு எல்லாம்…” எனப் புலம்புவது எல்லாம்… டூ மச் பாஸ்! தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை அதர்வா கதாபாத்திரம் உட்கொள்வது, அதில் திளைப்பது, க்ரியேட்டிவிட்டிக்கும் போதைக்கும் தொடர்பிருப்பதாகப் பேசுவது, அந்தப் போதைப் பொருள்களை ரொமான்டிசைஸ் செய்வது எனத் தேவையில்லாத கருத்துகளாலும், காட்சிகளாலும் முதற்பாதியை இழுத்திருக்கிறது திரைக்கதை.
போதையில் ஒரு மனிதனின் மனதிற்குள் நிகழும் உளவியல் மாற்றங்களையும், மாயத் தோற்றங்களையும் காட்சிப்படுத்த முயன்றது வரை ஓகே, ஆனால் அதற்கு ஒரு வரைமுறை வேண்டாமா பாஸ்?! அதேபோல, எம்.எஸ்.வி மற்றும் இளையராஜாவின் பழைய பாடல்களைப் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை பின்னணியில் ஓடவிடுவது, சிறிது நேரத்திலேயே திகட்டத் தொடங்கிவிடுகிறது.
இறுதிக்காட்சிக்கு முந்தைய ‘கருத்தூசி’ வசனங்களும் ஒட்டமில்லை. ஆனாலும், கதாபாத்திரங்களின் நடிப்பும், திரைக்கதையிலுள்ள சின்ன சின்ன திருப்பங்களும் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை தருகின்றன. குழந்தை வளர்ப்பு, அதீத மதுபோதையால் விளையும் தீமை, பெரிய இயக்குநர்கள் செய்யும் கதை திருட்டு எனப் பல கருத்து கம்பங்களைத் தொட்டுச் செல்கிறது படம். ஆனால், எதிலும் முழுமையில்லாமல்!
தொழில்நுட்ப ரீதியாகத் தப்பித்தாலும், திரைக்கதை, கதாபாத்திர வார்ப்புகள், படத்தின் கருத்து என மற்றவைப் பாதி கிணற்றை மட்டுமே தாண்டுவதால் ‘நிறங்கள் மூன்றிலும்’ பொலிவில்லை.
Comments are closed