மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் இன்று காலை குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது. சமீபத்தில் நடிகை அபர்ணா தாஸ் திருமணமும் குருவாயூர் கோயிலில் நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை பல ஆண்டுகளாக எண்டர்டெயின் செய்து வருகிறார் நடிகர் ஜெயராம். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஓஸ்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தளபதி விஜய்யின் கோட் படத்திலும் ஜெயராம் நடித்து வருகிறார்.
அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் தனது காதலியுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்துக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் ஜெயராம் தனது மகள் நிச்சயதார்த்தத்தை நடத்தியிருந்தார். இந்நிலையில், இன்று திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.
ஜெயராம் மகள் நிச்சயதார்த்தம்:
ஜெயராம் மற்றும் பார்வதி தம்பதியினரின் மகள் மாளவிகா ஜெயராம் தனது காதலனுடன் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். நவனீத் கிரிஷ் என்பவருடன் மாளவிகா ஜெயராமுக்கு கூர்கில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு இன்னொரு மகன் கிடைத்து விட்டார் என பதிவிட்டிருந்தார்.
கோகுலம் முதல் கோட் வரை:
1988ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அபாரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜெயராம். தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த நடிப்பால் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் கோகுலம் படத்தில் அறிமுகமான ஜெயராம் புருஷ லட்சணம், கோலங்கள், முறை மாமன், பெரிய இடத்து மாப்பிள்ளை, நைனா, பஞ்ச தந்திரம், துப்பாக்கி, கடைசியாக பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 வரை நடித்துள்ளார். அடுத்து கோட் படத்திலும் நடித்து வருகிறார்.
ஜெயராம் மகள் திருமணம் :
நவ்னீத் கிரிஷ் என்பவருடன் நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில், இன்று இருவருக்கும் குருவாயூர் திருக்கோயிலில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தங்கள் திருமணங்களை குருவாயூர் கோயிலில் நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் தனியாக மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி சினிமா பிரபலங்களுக்கு விருந்து கொடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மகள் திருமணத்தில் ஜெயராம் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் காட்சிகளும் கோயிலில் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.
லண்டன் மாப்பிள்ளை:
நவ்னீத் கிரிஷ் லண்டனில் சார்டட் அக்கவுண்டண்டாக பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவரும் மாளவிகாவும் காதலித்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் இன்று குடும்பத்தினர் சம்மதத்துடன் ஆண்டவன் சன்னதியில் நடைபெற்றது. திருமணத்தில் சில பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரபலங்கள் வாழ்த்து:
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரான ஜெயராமின் மகள் திருமணம் இன்று நடைபெறும் நிலையில், பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜெயராம் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அவரது மகள் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.