திருநாவுக்கரசர் கருவறையில் கண்ணீர்மழை பொழிய வழிபட்ட திருத்தலங்கள்

5/5 - (3 votes)

நாவுக்கரசு சுவாமிகளின் வரலாற்று நிகழ்வுகளை 429 பெரிய புராணத் திருப்பாடல்களில் தெய்வச் சேக்கிழார் விவரித்துப் போற்றியுள்ளார். இவற்றுள் சுவாமிகள் கருவறை தரிசன சமயத்தில் கண்ணருவி பொழிய வழிபட்டுள்ள திருத்தலங்களை இப்பதிவில் சிந்திப்போம். இத்திருப்பாடல்களின் பொருளினைக் கற்றறிகையில், சுவாமிகளுக்கு எத்தகைய அற்புத அனுபவம் இத்தலங்களில் கிட்டியுள்ளது என்பதோடு, நாம் எவ்வித மனநிலையில் உளமுருகி ஆலய வழிபாடு புரிதல் வேண்டும் என்பதும் தெள்ளென விளங்கும்,

தில்லை

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 167

கையும் தலைமிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களுமுடன் உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழுமுன்(பு) எழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும்அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்

சீர்காழி

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 186

பண்பயில் வண்டறை சோலை சூழும் காழிப்
பரமர்திருக் கோபுரத்தைப் பணிந்துள் புக்கு
விண்பணிய ஓங்குபெரு விமானம் தன்னை
வலம்கொண்டு தொழுது விழுந்தெழுந்த எல்லைச்
சண்பைவரு பிள்ளையார் அப்பர் உங்கள்
தம்பிரானாரைநீர் பாடீர் என்னக்
கண்பயிலும் புனல்பொழிய அரசும் வாய்மைக்
கலைபயிலும் மொழிபொழியக் கசிந்து பாடி

திருவாரூர்

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 222

கண்டு தொழுது விழுந்து கர சரணாதிஅங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்தன்பு கூரக் கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து

புகலூர்

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 238

அத்திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்திழி தாரைக் கண்பொழி நீர்மெய்ம் முழுதாரப்
பைத்தலை நாகப் பூண் அணிவாரைப் பணிவுற்றார்

திருவீழிமிழலை

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 253

கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியும் கண்ணருவி விரவப் பரவும் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்(று)
உய்யு நெறித் தாண்டகம் மொழிந்தங்(கு) ஒழியாக் காதல் சிறந்தோங்க

திருவோத்தூர்

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 316

செக்கர்ச் சடையார் திருவோத்தூர்த் தேவர் பிரானார் தம்கோயில்
புக்கு வலம் கொண்டெதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல்பொழிய
முக்கட் பிரானை விரும்புமொழித் திருத்தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்தொழுகுவார்

திருக்கச்சி ஏகம்பம்

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 323

வார்ந்து சொரிந்த கண்ணருவி மயிர்க்கால் தோறும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப அன்பு கரைந்(து) என்புள் அலைப்பச்
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத் திளைப்பத் திருஏகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடும் பதிகம் பாடுவார்

திருவொற்றியூர்

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 335

எழுதாத மறைஅளித்த எழுத்தறியும் பெருமானைத்
தொழு(து) ஆர்வமுற நிலத்தில் தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்
முழுதாய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்மினார்

திருக்காளத்தி

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 346

மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குற முன்னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி
அலைத்துவிழும் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்

திருப்பூந்துருத்தி

திருநாவுக்கசர் புராணம் – திருப்பாடல் 387

சேர்ந்து விருப்பொடும் புக்குத் திருநட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டிறைஞ்சித் தம்பெருமான் திருமுன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்தொழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர்மழை தூங்க அயர்வுறும் தன்மையரானார்

இறுதிக் குறிப்பு

கருவறை தரிசனம் அல்லாத பிற சமயங்களில் சுவாமிகள் திருவருளை நினைந்து கண்ணீர்மழை பொழிந்துள்ள திருத்தலங்கள் (திருவதிகை – சூலை நோய் நீங்கப் பெறுகையில், தூங்கானை மாடம் – இடப சூல முத்திரை பொறிக்கப் பெறுகையில், தில்லை – உழவாரத் தொண்டு புரிகையில், திருப்பைஞ்ஞீலி – ஆலய வாயிலில் இறைவர் திருவுருவம் மறைத்த சமயத்தில், ஐயாறு – குளத்தினின்று வெளிவருகையில் மற்றும் கயிலைக் காட்சி பெறுகையில்)

I am Vimal - Versatile blog writer with a flair for transforming ideas into engaging narratives. Crafting content that informs, inspires, and captivates readers on a diverse range of topics.

You may also like...