ஊட்டி, கொடைக்கானல் பக்கம் மட்டும் தான் தற்போது கிளைமேட் சூப்பராக இருப்பதாக நினைக்கிறீர்களா.. சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கிளைமேட் தற்போது மிக அருமையாக இருக்கிறது. நேற்று சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழை அந்த பகுதியை குளுகுளுவென மாற்றி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு கடுமையாக பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தார்கள் . இந்நிலையில் கோடை மழை காரணமாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது குளுகுளு கால நிலை நிலவுகிறது.
முன்னதாக இந்த மாதம் முதல் வாரம் வரை பகலில் கடுமையான வெப்பம் நீடித்தது.இரவில் மட்டுமே ஏற்காட்டில் குளிரான கால நிலை இருந்தது. தற்போது சேலம் மற்றும் ஏற்காடு பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்ததுள்ளது. சேலத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. வெயிலின் அளவு 96.8 டிகிரி பாரன்ஹீட் என்கிற அளவில் குறைவாக இருந்தது.
இந்நிலையில் சேலத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கருமேகமூட்டம் கூடியது. இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரமே நீடித்த நிலையில் வெப்பம் தணிந்தது. இதேபோல் ஏற்காட்டிலும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலத்தில் தற்போது நிலவும் அருமையான கால நிலையை அனுபவிக்க சேலம் மாவட்டமின்றி பிற மாவட்டங்களில் இருந்து தினமும் பலர் தங்களது குடும்பத்துடன் ஏற்காட்டு வந்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழையில் நனைத்தபடி ஏற்காட்டை சுற்றி பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஞாயிறு அன்று ஏற்காடு மலையில் உள்ள காட்சிமுனைப் பகுதிகளான லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் உள்ளிட்ட இடங்களை பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மலை உச்சியில் இருந்தபடி பள்ளத்தாக்குப் பகுதிகளின் இயற்கை அழகை கழுகுப் பார்வையில் பார்த்து பிரமித்தார்கள்.
அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், மான் பூங்கா என பூங்காக்கள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
வார இறுதி தொடங்கி தற்போது வரை ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுவாக மே மாதத்தில் ஊட்டி, கொடைக்கானலில் மட்டுமே கிளைமேட் இதமாக இருக்கும் என்று சுற்றுலா பயணிகள் நினைப்பது உண்டு. ஆனால் ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் இப்போது அருமையான கிளைமேட் நிலவுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு நிச்சயம் ஏற்காடு பயணம் அற்புதமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் நிலவரப்படி தம்மம்பட்டியில் 23 மில்லி மீட்டர் மழை பெய்திருந்த சேலம் நகரில் 12.6 மில்லி மீட்டர் மழையும், ஏற்காட்டில் 17.4 மில்லி மீட்டர் மழையும், ஆணைமடுவு, ஆத்தூர், கரியகோவில், வீரகனூர் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.